கொழும்பு, மார்ச் 11: அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா., மனித உரிமை தீர்மானம் தொடர்பாக இலங்கை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தீர்மானம்கொண்டு வர வேண்டும் என இலங்கைக்கு கடந்த வாரம் இந்தியா ஆலோசனை வழங்கியிருந்தது.
இதனை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் ரவிநாதா ஆர்யசின்ஹா “அமெரிக்கா தீர்மானத்தின் சாராம்சத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் உத்தேசிக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா காண்டு வந்த தீர்மானத்தையும் இலங்கை அங்கீகரிக்கவில்லை” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்துலக ரீதியிலும், இந்தியா, தமிழகம் சார்பிலும் பல்வேறு வகைகளில் நெருக்குதல்கள் தரப்பட்டு வந்தாலும் இலங்கை அதிபர் ராஜபக்சே (படம்) இன்னும் தனது நிலையிலிருந்து பின்வாங்காமல் இருந்து வருகின்றார்.