கோலாலம்பூர் – அல்தான்துயா கொலை வழக்கு பற்றி அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தில் உண்மையில்லை என்று அரசாங்கம் நினைத்தால், அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கட்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
” ‘மலேசியாவில் கொலை’ என்ற அரைமணி நேர ஆவணப்படம் மூலம் அல் ஜசீரா செய்தி நிறுவனம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக நஜிப் அரசாங்கம் கூறுன்கிறது. அந்த ஆவணப்படத்தில் உண்மையில்லை என்றும் கூறிகின்றது.”
“அல் ஜசீரா வை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் மக்கள் பார்க்கிறார்கள். அதில் கூறப்படும் செய்திகளை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதை உண்மையில்லை என்று கூறினால் சில மலேசியர்கள் நம்புவார்கள் ஆனால் வெளிநாட்டினரை நம்பவைக்க முடியாது”
“எல்லாவற்றையும் விட, மெர்டேக்கா மாதத்தில்,பிரதமர் உட்பட மலேசியாவைப் பற்றி சர்ச்சையான காணொளி ஒன்றை அல் ஜசீரா வெளியிட்டுள்ளது. நேயர்களுக்கு அதை நம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அக்காணொளி நஜிப்புக்கு மட்டுமல்ல நாட்டின் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரும் அக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறுவது சாதாரண விசயமல்ல” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.