புதுடில்லி – தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனைக் கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, 700க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளைச் சட்டவிரோதமாகத் தனது வீட்டில் இணைத்து, அதனைச் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவல்களுக்குப் பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 வார இடைக்கால முன் பிணை பெற்றிருந்தார்.
ஆனால், சிபிஐ விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால், அவரது முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தை அணுகியது.ஆகையால் தயாநிதி மாறனின் முன் பிணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ முன் சரணடையவும் உத்தரவிட்டிருந்தது
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்றுவரை தயாநிதி மாறனைக் கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
அதுவரை தயாநிதி மாறனைக் கைது செய்வதற்கான தடையையும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.