Home இந்தியா “இப்படியே சென்றால் கட்சி அவ்வளவுதான்” – வைகோவை எச்சரிக்கும் தொண்டர்கள்!  

“இப்படியே சென்றால் கட்சி அவ்வளவுதான்” – வைகோவை எச்சரிக்கும் தொண்டர்கள்!  

227
0
SHARE

vaiko2சென்னை – அக்ரோஷமோ, அழுகையோ முணுக்கென்று எட்டிப் பார்த்துவிடும் வெள்ளந்தியான மனிதர் வைகோ. ஈழத் தமிழர் போராட்டம் முதல் காந்தியவாதி சசிப் பெருமாளின் மரணம் வரை, வைகோ முன்வைக்காத போராட்டம் தமிழகத்தில் இல்லை. அதற்காக செல்லாத சிறைவாசமும் இல்லை.

அப்படி இருந்தும் தமிழகம் பெரிய அளவில் அங்கீகரிக்காத தலைவராகவே வைகோ உள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. அரசியலில் அங்கீகாரம் என்பது வெறும் அறிந்து கொள்வது மட்டுமல்ல, அதிகாரம் அளிப்பதும் தான்.

வைகோ, திமுக-வில் இருந்து பிரிந்து மதிமுக-வை ஆரம்பித்த பொழுது, எம்ஜிஆரை போல் மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்பார் என பெரும்பாலானவர்களால் நம்பப்பட்டது. ஆனால், அது நிகழவில்லை. அதற்கு காலம் தான் காரணமா? அல்லது வைகோ-வின் வளர்ச்சி திட்டமிட்டு மட்டுப்படுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை. காலம் சென்ற அவை தற்போது வைகோ-விற்கு பெரிய பிரச்சனையாகவே இல்லை. காரணம், தற்போது தன் இருப்பை நிலைப்படுத்திக் கொள்ளவதே மதிமுக-விற்கு மிகப் பெரிய பிரச்சனையாகி உள்ளது.

vaiko1கண்முன் நிற்கும் 2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ, எப்படியும் திமுக பக்கம் வந்துவிடுவார். கருணாநிதியும் ஒரு வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வார். அப்படி நிகழ்ந்தால், மதிமுக 10-20 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்து இருந்த அக்கட்சிகாரர்களுக்கு, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வைகோ அளித்த அதிர்ச்சி வைத்தியம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தமாக 7 சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து இது தான் நமது தேர்தல் கூட்டணி. மக்கள் நலன் காக்கும் கூட்டணி என்று வைகோ அறிவித்தார். இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டதாம். அப்பவே இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், வைகோ தன்னிச்சையாக இந்த கூட்டணியை அறிவித்தார் என்று கூறப்படுகிறது.

20 வருடங்களாக கட்சிக்காக உழைத்தும் எத்தகைய ஆட்சிப் பொறுப்புகளும் கிடைக்காமல் போய்க் கொண்டிருப்பது பற்றி மனம் குமுறிக் கொண்டிருந்தவர்கள் தற்போது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு தயாராகி வருவதாக மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

jaya_vaiko_295மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் மேற்கொண்ட சமயத்தில், ஜெயலலிதாவே வலிய வந்து காரை விட்டு இறங்கி வைகோ-விடம் பேசிய பொழுதாவது, அதிமுக-வுடன் இணக்கான போக்கை கடைப்பிடித்து இருக்கலாம். அல்லது, கூட்டணியை மையப்படுத்தியே அருள்நிதியின் திருமணத்திற்கு, வைகோவை நேரில் வந்து ஸ்டாலின் சந்தித்த போதாவது திமுக-வுடன் தான் கூட்டணி என அறிவித்து இருக்கலாம். அப்படி எதுவும் இல்லாமல், சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க தயார் என கூறுவதற்கு தலைவர் எப்படி துணிந்தார் என மதிமுக நிர்வாகிகளே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, மதிமுக தலைமைக் கழகத்திற்கு, உங்களை நேசிக்கும் தொண்டர்கள் என்ற பெயரில் இரகசியக் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாம். அதில், “கட்சிக்காரர்களை, கடன்காரர்களாகவும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கும் உங்களின் உள்நோக்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள். உண்மையில் தி.மு.க-வுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற கொள்கை இருந்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் கூட்டு வைத்தீர்கள்? எதற்கு சட்டமன்றத் தேர்தலின் போது மட்டும் குழப்பம் செய்கிறீர்கள்?” என்கிற ரீதியில் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், கரை சேராக் கப்பலை நம்பிக் கொண்டு இனியும்Vaiko_Karuna_AFP பயணிக்க தயாரில்லை என்ற மனநிலையில் மதிமுக தொண்டர்கள் வந்துவிட்டனரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

திமுக-அதிமுக-வை பொது எதிரிகளாகவும், கொள்கையில் நம்பிக்கை இருக்கும் கட்சிகளுடன் கூட்டு என்று கருதி, வைகோ கூட்டணி அமைத்தது தவறில்லை. ஆனால், அவர் இதனை கட்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் செய்து இருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

இப்போதைய சூழலில் மதிமுக நிலைபெற வேண்டுமானால், 2016 தேர்தலில் சொல்லிக் கொள்ளும் படி குறைந்தபட்ச இடங்களையாவது கைப்பற்ற வேண்டும். அதற்கு திமுக-அதிமுக என பெரிய கட்சிகளை அண்டி இருக்கத்தான் வேண்டும்.

– சுரேஷ்

Comments