மதுரை – மதுரை மாவட்டத்தில் ஏறக்குறைய ரூ.16000 கோடி அளவிற்குக் கிரானைட் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் கடந்த 10 மாதங்களாக அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பொருளாதார முறைகேடு தவிர கிரானைட் எடுப்பதற்காக நரபலி கொடுத்த திகில் புகாரும் சேர்ந்து கொண்டதில் கிரானைட் குவாரி விவகாரம் பரபரவெனப் பற்றிக் கொண்டுள்ளது.
நரபலி கொடுத்துச் சடலங்களைக் குவாரிக்குஅருகில் இருக்கும் சுடுகாட்டில் புதைத்துள்ளதாகக் குவாரியில் முன்பு வேலை பார்த்த உள்ளூர்வாசியான சேவற்கொடியோன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சகாயம், பிணங்களைத் தோண்டி ஆய்வு செய்ய காவல்துறையைக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி,சேவற்கொடியோன் குறிப்பிட்ட இடங்களில் 4 பிணங்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. 7 மாதக் குழந்தையின் எலும்புக் கூடும் கிடைத்தது.
முதல் சடலத்துடன், காவித் துணியும், துணியில் சுற்றப்பட்ட முழுத் தேங்காயும் கிடைத்தது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மக்கள், சனிக்கிழமை இறந்தவர்களின் சடலத்துடன் தேங்காயைக் கட்டுவது வழக்கம். சனி பிணம் தனியே போகாது என்பதால், தேங்காய் அல்லது கோழிக்குஞ்சை உடன் புதைப்போம் என்றனர்.
உள்ளூர்க்காரர்கள் எப்போதும் பிணத்தின் தலை தெற்குப்புறமாக இருக்குமாறு வைத்துத்தான் புதைப்பது வழக்கமாம். ஆனால், அடுத்ததாகக் கிடைத்த இரண்டு சடலங்களும், தென்மேற்குத் திசையில் தலை இருக்குமாறு புதைக்கப்பட்டுள்ளன. எனவே,இவை இரண்டும் அவசர கதியில் புதைக்கப்பட்டது போலத் தெரிகிறது.
குழந்தையின் எலும்பிக்கூடு அந்த ஊரைச் சேர்ந்த செல்வி என்பவரது 7 மாத ஆண் குழந்தை எனறும், இதயக் கோளாறு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இறந்துவிட்டதால் ஆம்புலன்ஸில் நேரடியாக இங்கே கொண்டு வந்து புதைத்து விட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறினர்.
அதனால், அது நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அல்ல என்பது உறுதியானது. சந்தேகத்திற்கு இடமான எலும்புக் கூடுகள் மதுரைக்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவை நரபலி கொடுக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுடையதா அல்லது இயற்கையாக இறந்து புதைக்கப்பட்டவருடையதா என்பது குறித்து மருத்துவ அறிக்கைகளுக்குப் பின்னரே தெரிய வரும்.
இந்நிலையில், நரபலி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, பிஆர்பி கிரானைட் குவாரி நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேருக்குக் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.