கோலாலம்பூர்- இன்று இரவு ரகசிய இடத்தில் 20 ஆயிரம் சிவப்புச் சட்டை போராட்டக்காரர்கள் திரள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் முன்னறிவிக்கப்படாத ஓரிடத்தில் திரள இருப்பதாக, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவரான முகமட் அலி பெஹரூம் (படம்) எனும் அலி டிஞ்சு கூறினார்.
“எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க விரும்பவில்லை. ஏனெனில் இது எங்கள் உரிமை,” என்று அலி டிஞ்சு தெரிவித்துள்ளார்.
அலி டிஞ்சுவுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜூலையில் லோ யாட் வணிக வளாக கலவரத்தின் போது அவர் ஆற்றிய உரை தொடர்பாக காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து தேச நிந்தனைச் சட்டத்தின் கீழும் அவரிடம் விசாரணை நடந்தது.
அதற்கு முன்பும் அவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதற்கிடையே சிவப்புச் சட்டை பேரணி தொடர்பாக வெளிவரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.