Home Featured நாடு மெகா டெக் அனைத்துலகக் கல்லூரி சுபாங் கிளையை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்!

மெகா டெக் அனைத்துலகக் கல்லூரி சுபாங் கிளையை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்!

813
0
SHARE
Ad

subra-khairy-mega tech-international college-openingசுபாங் ஜெயா – இங்குள்ள ஒன் சிட்டி (One City) வணிக வளாகத்தில் இன்று மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மெகா டெக் அனைத்துலகக் கல்லூரியின் கிளையைத் திறந்து வைத்தார்.

அவருடன் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

mega-tech-college-souvenir-t.mohan-subra-khairyடாக்டர் சுப்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது. (இடமிருந்து) மெகா டெக் கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி சைலநாதன், ஆலோசகர் டி.மோகன், டாக்டர் சுப்ரா, கைரி ஜமாலுடின்…

#TamilSchoolmychoice

மெகா டெக் கல்லூரியின் ஆலோசகராகச் செயல்படும் டத்தோ டி.மோகனும் இந்த கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கிய திறப்பு விழா நிகழ்ச்சியில் மெகா டெக் கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி பி.சைலநாதன் வரவேற்புரையாற்றினார்.

கைரி ஜமாலுடின் சிறப்புரை

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் வழங்கிய சிறப்புரையில், பொதுவாக இரண்டு அமைச்சர்கள் இதுபோன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நடைமுறையல்ல என்றாலும், மெகா டெக் கல்லூரியின் ஆலோசகராகச் செயல்படும் டத்தோ டி.மோகன் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைக் காட்டுவதற்காகவே தானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.

mega tech-college-mou-signingமெகா டெக் அனைத்துலகக் கல்லூரிக்கும், வெஸ்ட் ஸ்காட்லாந்து பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், திறப்பு விழாவின் போது கையெழுத்தானது…

தன்னுடன் தேசிய முன்னணியில் மஇகா இளைஞர் பகுதித் தலைவராக இணைந்து பணியாற்றிய டி.மோகனின் கடந்த கால நட்புறவைக் கருத்தில் கொண்டு, அழைப்பிற்கு மரியாதை தந்து நிகழ்ச்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்ட கைரி ஜமாலுடின், 1988ஆம் ஆண்டு முதல் பழைய கிள்ளான் சாலையில் இயங்கி வந்த மெகா டெக் கல்லூரியைத் தான் அறிந்திருப்பதாகவும், கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழில் நுட்பத் துறை பட்டதாரிகளைத் தந்திருக்கும் அந்தக் கல்லூரியின் கல்விச் சேவையையும் பாராட்டினார்.

டாக்டர் சுப்ராவின் திறப்புரை

கல்லூரியின் சுபாங் கிளையைத் திறந்து வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் ஜெர்மனி நாட்டின் கல்வி முறை தன்னை எப்போதும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

subra-speech-mega-tech-“ஜெர்மனியில் உள்ள கல்வி முறையினால், டெக்னோகிராட் (Technocrat) எனப்படும் தொழில்நுட்பத் திறனும் நிர்வாகத் திறனும் ஒருங்கே அமைந்த உயர்தரப் பணியாளர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். உதாரணமாக நான் சந்தித்த ஜெர்மன் நாட்டுத் தூதர் ஒருவர், தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றவர். இதனால், உயர் நிர்வாகியாக இருப்பவர்கள் கூட, சிறிய கைத்தொழில் மற்றும் தொழில் நுட்பத் திறன்களைக் கொண்டிருப்பார்கள். அதே போன்று நாமும் கைத்திறனுடன் கூடிய தொழில் நுட்ப அறிவைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

தான் தொழிலாளர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கூட, அந்த அமைச்சினால் வழங்கப்படும் கைத்திறன் பயிற்சிகள், மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் துறைகளுக்குத் தேவைப்படும் பயிற்சிகளாக இருப்பதைத் தான் உறுதி செய்ததாகவும், அந்தப் பயிற்சிகளை முடித்து விட்டு வரும் பயிற்சியாளர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க வேண்டும், அவர்களுக்குக் குறைந்த பட்சம் 2,000 ரிங்கிட் சம்பளம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சிகள் வழங்கப்பட, தான் முயற்சி எடுத்ததாகவும் டாக்டர் சுப்ரா தனது உரையில் குறிப்பிட்டார்.

mega-tech-college-opening-subra-press-conferenceதிறப்பு விழாவிற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் (இடமிருந்து) மெகா டெக் கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி சைலநாதன், டத்தோ எம்.சரவணன், டாக்டர் சுப்ரா, டத்தோ டி.மோகன். பின்னால் நின்று கொண்டிருப்பவர் சுப்ராவின் பத்திரிக்கைச் செயலாளர்  சிவா.

கடந்த 27 ஆண்டுகளாக சிறப்புடன் செயல்பட்டு வரும் மெகா டெக் புதிய வளாகத்தில் மேலும் செம்மையுடன் செயல்பட்டு, நாட்டின் தொழில் துறைகளுக்குத் தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட டாக்டர் சுப்ரா, இந்தக் கல்லூரி தனது பயிற்சிகளுக்கும், பட்டங்களுக்கும் ஐந்து நட்சத்திரத் தேர்ச்சித் தகுதிகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

திறப்பு விழாவிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டாக்டர் சுப்ரா, கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா திட்டவட்டமாக எதிர்க்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.