சென்னை- தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எந்தக் கட்சிகளுக்கிடையில் கூட்டணி ஏற்படும் என்ற ஆரூடங்கள் ஒரு புறம் தமிழக அரசியலை ஆக்கிரமித்திருந்தாலும், திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதிக்கும் அவரது இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோருக்கு இடையில் நடைபெறும் குடும்பச் சண்டைதான் தீர்க்க முடியாத தலையாய பிரச்சனை.
இந்நிலையில், மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள திமுக தலைவர் கருணாநிதி பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் கருணாநிதி, தயாளு அம்மாள் தம்பதியரின் திருமண நாளாகும். இதையொட்டி மதுரையில் இருந்து சென்னை வந்த அழகிரி, கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயார் தயாளுவை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது இருவரும் மனம் விட்டுப் பேசியதாகவும், அதன் முடிவில் திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்த்துக் கொள்ள கருணாநிதி சம்மதித்துள்ள தகவலை அழகிரியிடம் தயாளு கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அழகிரி, இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் கோபாலபுரம் இல்லத்துக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
“திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து நான் எழுப்பிய குற்றச்சாட்டுகள், கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அதற்கு இதுவரை பதில் வரவில்லை. இன்னும் 2 மாதங்களில் நல்ல செய்தி கூற இருக்கிறேன்” என்று அழகிரி தெரிவித்தார்.