Home Featured தமிழ் நாடு மதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டமா? வைகோ எழுப்பும் புகார்!

மதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டமா? வைகோ எழுப்பும் புகார்!

603
0
SHARE
Ad

vaiko_20092011_periyarthalam2திருப்பூர்- மதிமுகவை அழிக்க திமுக தலைமை திட்டமிட்டுச் செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார். கடந்த காலத்தில் திமுகவில் இருந்து பிரிந்தபோது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது முன்வைத்த குற்றச்சாட்டை இப்போது மீண்டும் அவர் எழுப்பியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் பேசிய அவர், கருணாநிதி, ஸ்டாலின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை ஏவினார்.

“குற்றச்செயல்களில் ஈடுபடும் திருடர்களை, காவல்துறையினர் அவர்களது, பாணியை (ஸ்டைல்) வைத்து எளிதாக கண்டுபிடித்து விடுவர். அதேபோல், திமுகவினர் மீண்டும், மதிமுகவை அழிக்கக் களம் இறங்கியுள்ளனர். மதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுக்கு திமுக தரப்பில் இருந்து ஒரே மாதிரியான அச்சடிக்கப்பட்ட ‘சைக்ளோ ஸ்டைல்’ கடிதம் அனுப்பப்பட்டது. என்னைப் பற்றி கடுமையான விமர்சனங்கள்; மதிமுகவை சுடுகாட்டுக்கு விரைவில் கொண்டு செல்வோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.” என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“என் மீது இதேபோல், ‘சைக்ளோ ஸ்டைல்’ கடிதம் எழுதி கட்சியை விட்டு நீக்கினார்கள். அவர் பையனும், பையனைச் சேர்ந்தவர்களும்தான் இந்த வேலையை செய்தனர்,” என்று வைகோ காட்டத்துடன் கூறினார்.

மூன்று நாட்களுக்கு முன்பு வரை, ஆளும்கட்சியை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என தாம் முடிவு செய்திருந்ததாகவும், இந்நிலையில் திமுக தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தாம் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வைகோவின் இந்த ஆவேசப் பேச்சின் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, மதிமுக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரியவருகிறது.

அண்மையில் வைகோவின் மதிமுக கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் திமுகவுக்கு கட்சி மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.