Home Featured நாடு பீப்பாய்க்குள் சடலம்: மலேசியாவில் இது புதிதல்ல!

பீப்பாய்க்குள் சடலம்: மலேசியாவில் இது புதிதல்ல!

552
0
SHARE
Ad

Kevin moraisகோலாலம்பூர் – மாயமான அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், கொலை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் எண்ணெய் பீப்பாய்குள் கான்கிரீட் கொண்டு அடைத்து ஆற்றில் வீசப்பட்டிருப்பது மலேசியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கெவின் மொராயிஸ் உயர் பதவியில் உள்ளதால், இந்த சம்பவம் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்று பரபரப்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் கொலை செய்து எண்ணெய் பீப்பாய்க்குள் போட்டு கான்கிரீட் கொண்டு அடைத்து ஆற்றில் வீசுவது மலேசியாவில் புதிதல்ல என்கிறது பெர்னாமா அறிக்கை.

கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கி தற்போது கெவின் மொராயிஸ் கொலை வரை இதுவரை 10 சம்பவங்கள் இதே போன்ற முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, புக்கிட் பெருந்துங்கில் உள்ள கம்போங் திமா என்ற இடத்தில் இருந்த குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நீலநிற பீப்பாய்க்குள் ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற சம்பவங்கள்:

– 1998-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி, செலாயாங்கில் பத்து9 என்ற இடத்தில் உள்ள ஆற்றில் மிதந்த பீப்பாய்க்குள் வங்காளதேச தொழிலாளர் ஒருவரின் சடலம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

-2000-த்தில் ஷாஆலமில் செக்சன் 28-ல், கம்போங் ஹிகாம் என்ற இடத்தில் பீப்பாய்க்குள் சிமெண்ட் ஊற்றி அடைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

– 2004-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, செத்தாப்பாவில் உள்ள ஆயர் பனாஸ் என்ற இடத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி பணிகள் நடந்து கொண்டிருந்த போனஸ் ஆற்றுப் படுக்கையில் பீப்பாய்க்குள் அழுகிய நிலையில் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.

– 2005-ம் ஆண்டு, நவம்பர் 16-ம் தேதி, கிளந்தானிலுள்ள கம்போங் பாசிர் பூத்தே என்ற இடத்தில் வீடு ஒன்றின் வெளிப்புறச் சுவர் அருகே பாகிஸ்தான் பிரஜை ஒருவரின் சடலம் பீப்பாய்க்குள் வைத்து சிமெண்ட் கொண்டு அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.

– 2005-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி, நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள தாமான் நிலாய் பெர்டானா என்ற இடத்தில் பீப்பாய்க்குள் 31 வயது இந்தோனேசிய ஆடவரின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.

– 2006-ம் ஆண்டு ஜூலை 29- ம் தேதி, செப்பாங்கில் தாமான் புத்ரா பெர்டானா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்ட சடலம் ஒன்று டிரம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

– 2009-ம் ஆண்டு, மார்ச் 21-ம் தேதி, ஜோகூர், மூவார் பகுதியில் உள்ள கம்போங் பாரிட் புங்கூர் டாராட் என்ற இடத்தில் பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

– 2012-ம் ஆண்டு, ஜூன் 29-ம் தேதி, காஜாங்கில், கம்போங் பாரு பலகோங் என்ற இடத்திலுள்ள காட்டுப்பகுதியில், சிமெண்ட் ஊற்றப்பட்ட எண்ணெய் பீப்பாய்க்குள் இருந்து எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொலைகளுக்கான பின்னணி வெவ்வேறாக இருந்தாலும், சடலங்களை மறைக்க கொலைகாரர்கள் பயன்படுத்தும் இந்த உத்தி ஒன்று தான்.

இப்படி செய்வதன் மூலம் சடலங்களை எளிதில் மறைத்துவிடலாம். அப்படியே காவல்துறையில் கண்டுபிடித்தாலும் அதற்குள் சடலம் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து போயிருக்கும் என்பது கொலைகாரர்களின் எண்ணமாக இருக்கலாம்.

அரசாங்கத்தில் சட்டத்துறையில் இருந்தவருக்கே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும் நிலையில், இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா நாட்டின் சட்டம் ஒழுங்கு?

தொகுப்பு – செல்லியல்