கோலாலம்பூர் – அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 22 வயது ஆடவர் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் கெடாவில் கூலிம் பகுதியில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையர் டத்தோ சைனுடின் அகமட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி, காலை 7.51 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா மாஸ் அருகே நடைபெற்ற விபத்து ஒன்றைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
காரணம் அந்த விபத்திற்கும், மொராயிஸ் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறை நம்புகிறது.
“இது தொடர்பில் (விபத்து) தகவல் தெரிந்தவர்கள், குறிப்பாக கேமராவில் பதிவாகியுள்ள வெள்ளை நிற டோயோட்டா எஸ்டிமா காரில் வந்த ஓட்டுநரோ அல்லது பயணியோ அந்த சம்பவத்தைப் பார்த்துள்ளார்கள். அவர்கள் முன் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று சைனுடின் தெரிவித்துள்ளார்.
காவல்துறை வெளியிட்டுள்ள அந்தக் காணொளியில் சாலை ஓரம் ஒரு கார் நிற்கிறது. அதன் அருகில் இன்னொரு கார் நிற்கிறது. அதிலிருந்து ஆட்கள் இறங்குகிறார்கள். சாலையின் எதிர்புறம் அந்த வழியாக வந்த வெள்ளை நிற டோயோட்டா எஸ்டிமா ஒரு சில வினாடிகள் நின்று செல்கிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கேஎல் காவல்துறையின் அழைப்பு எண் 03-2115999 -க்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
‘த ஸ்டார்’ வெளியிட்டுள்ள காணொளி:-