Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி இல்லாமல் தேர்தல் களமிறங்கத் தயங்கும் திமுக!

தமிழகப் பார்வை: ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி இல்லாமல் தேர்தல் களமிறங்கத் தயங்கும் திமுக!

985
0
SHARE
Ad

alagiri stalinசென்னை: (கலைஞர் கருணாநிதியின் மூத்த புதல்வர் மு.க.அழகிரி மீண்டும் கட்சிக்குத் திரும்புவார் என்ற கணிப்புகள் வெளியாகியிருப்பதற்கான  பின்னணி – செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் தமிழக அரசியல் அலசல்)

இந்த செப்டம்பர் மாதம் திமுகவிற்கு புனிதமான மாதம். முப்பெரும் விழாவை திமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மாதம்.

annaduraiதிமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் (செப்டம்பர் 15), திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் (செப்டம்பர் 17), திமுக, கொட்டும் மழையில் தோற்றம் கண்ட நாள் (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய தினங்களை ஒரு சேர, நாடு முழுக்க கட்சியினர் முப்பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்து வந்த காலம் போய், இன்றைக்கு ‘அழகிரி கட்சிக்குத் திரும்புவாரா’ என்ற ஒரு சிறிய கேள்வி வட்டத்திற்குள் கட்சியினர் முடங்கிக் கிடப்பது ஒரு சோகம்தான்.

#TamilSchoolmychoice

90 வயதைக் கடந்துவிட்ட கலைஞர் இன்னும் தெளிவான சிந்தனையுடன், மேடையில் பேசும் ஆற்றலுடன் உலா வந்தாலும், ஒரு சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது, முதுமையின் காரணமாக, ஓடியாடிப் பணியாற்ற முடியாமல், பிரச்சாரம் செய்ய இயலாமல் இருக்கின்றார்.

அவருக்குப் பதிலாக தலைமை தாங்கி கட்சியை வழி நடத்த முற்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு இணையான தலைமைத்துவ ஆற்றலை வழங்க முடியாமல் தடுமாறுகின்றார் என்பது தெளிவாகவே தெரிகின்றது.

கூட்டணி அமைக்க முடியாமல் திணறும் திமுக

m-k-stalinசரியான கூட்டணி அமைக்க முடியாமல் தனித்து விடப்பட்டு விடுமோ என்ற நிலைமையை நோக்கி திமுக சென்று கொண்டிருக்கின்றது.

திருப்பூர் திராவிடர் இயக்க மாநாட்டில் திமுகவுக்கு எதிராக வைகோவின் போர்க்குரல் பெரு முழக்கமாக ஒலித்து விட்டது. இனியும் வைகோ திமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை.

நேற்று கூட, சேலம் மதிமுகவினர் கூண்டோடு திமுகவுக்குத் தாவி விட்டதாக செய்தி வெளிவந்திருக்கின்றது.

விஜய்காந்தோ திமுகவுக்குப் பிடி கொடுக்காமல் வளைய வருகின்றார். பாஜகவோடு இணைய ஆர்வம் காட்டுகின்றார். தன்னை முதல்வராக அறிவிப்பவர்களுடன் கூட்டு என்ற விஜய்காந்தின் நிபந்தனை திமுக வட்டாரத்தில் எடுபடாது என்பது ஒரு பிரச்சனை என்றால், ஸ்டாலினை முதல்வராக ஏற்பது என்பது விஜய்காந்திற்கு ஏற்படக் கூடிய தன்மானக் குறைவாக அவரது கட்சியினரால் பார்க்கப்படுகின்றது.

ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தி அவருக்குப் பின்னால் நிற்க, படித்த அறிவாளியான அன்புமணிக்கும் அவரது தந்தை மருத்துவர் இராமதாசுக்கும்  ஆர்வமில்லை.

stalin_vijaya_2407191fஸ்டாலின் தம்பி மு.க.தமிழரசு (வலது) மகன் திருமணத்திற்கு விஜயகாந்திற்கு திருமண அழைப்பிதழ் வழங்கியபோது….

பாஜகவோ, திமுகவுடன் சேர்ந்து, அதிமுக மற்றும் ஜெயலலிதாவுடன் நிலவும் நல்லுறவை முறித்துக் கொள்ளத் தயாரில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவுடன் முறுக்கிக் கொண்டு நிற்கின்றனர்.

ஜி.கே.வாசனோ அதிமுகவுடன் இணைவார் என்பது தமிழக அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

இந்நிலையில் எஞ்சியிருப்பது காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்  மட்டும்தான். அப்படியே காங்கிரசுடன் சேர்ந்தாலும், காங்கிரசின் ஆதரவு பலம் தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை விளக்கத் தேவையில்லை.

கம்யூனிஸ்ட்டுகளும் இதுவரை எந்தக் கூட்டணி என்ற முடிவை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலை இப்படியே நீடித்துக்கொண்டே போவதால், திமுகவின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு குறிப்பாக கருணாநிதிக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கும் போலும்!

அழகிரி இல்லாத காரணத்தால் திமுகவுக்கு இழப்புதான்!

Alagiri-Stalinஅழகிரியும் இந்த சூழ்நிலையில், கட்சிக்கு வெளியே முறுக்கிக் கொண்டு நின்றால், அதனால் கட்சிக்குப் பாதிப்புதான் என்ற எண்ணம் மெல்ல மெல்ல திமுகவினரிடையே பரவி வருகின்றது.

காரணம், தேர்தல் சமயத்தில் அழகிரி எடக்கு முடக்காக ஏதாவது பேசினால் அது ஸ்டாலினின் தலைமைத்துவத்தையும் பாதிக்கும், திமுகவுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச வெற்றி வாய்ப்பையும் பாதிக்கும் என்பதால், அழகிரியை இப்போதே ஏதாவது காரணம் சொல்லி, கட்சிக்குள் இழுத்துப் போட்டு விட்டால் நிம்மதியாக தேர்தலைச் சந்திக்கலாம் என்பது கருணாநிதியின் கணக்காக இருக்கலாம்.

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், கருணாநிதியையும், ஸ்டாலினையும் வெறுப்பேற்றுவதற்காக அழகிரி வேறொரு கட்சியில் சேர்ந்தாலோ அல்லது புதிய கட்சியைத் தொடக்கினாலும் அதனாலும் திமுகவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம். வாக்கு வங்கி சிதறலாம்!

Kaunas - Stalinஇதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், தகுந்த கூட்டணியும் அமையாத பட்சத்தில் – அழகிரியை இன்னும் வெளியே வைத்துக் கொண்டிருப்பது உசிதமல்ல – அவரைக் கட்சியில் மீண்டும் சேர்க்காமல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்ற எண்ணத்துடன், அழகிரியை மீண்டும் கட்சி வலைக்குள் கொண்டு வந்து இணைப்பதற்கான குடும்ப அரசியல் பேச்சு வார்த்தைகள் மும்முரமாகியிருக்கின்றன.

அதன் வெளிப்பாடுதான் இன்னும் இரண்டு மாதத்தில் நல்ல செய்தி சொல்லுவேன் என்ற அழகிரியின் அறிக்கையும்!

அழகிரி இல்லாமல் திமுக களமிறங்கினால், தேர்தல் பிரச்சாரங்களில் அதுவே பிரதானமாகப் பேசப்படும் என்பதாலும், அவர் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுவதாகத் தெரிகின்றது.

அழகிரி கட்சிக்குத் திரும்பும் இந்த முடிவு ஸ்டாலினுக்குப் பின்னடைவுதான் என்றாலும், தமிழக சட்டமன்றத்தேர்தல் என்ற மாபெரும் போர்க்களத்தில் அதிமுக மற்றும் ஜெயலலிதா என்ற பிரம்மாண்ட யானைகளை எதிர்கொள்ள –

DMK -Uthaya Suriyan symbolமுதலில் கட்சிக்குள் பிளவுகளைத் தவிர்க்க வேண்டும், ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் – முக்கியமாக குடும்பத்திற்குள்ளேயே ஒன்றிணைப்பு இல்லையே என்ற களங்கம் தேர்தல் பிரச்சாரத்தில் வெளிவரக் கூடாது –

என்பது போன்ற காரணங்களாலும் அழகிரியின் வருகை திமுகவுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

அழகிரி திரும்புவதால் கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்பு கூடி விடாதுதான்! இருந்தாலும் இருக்கின்ற கொஞ்ச வாக்கு வங்கியும் சிதறி விடாத சூழல் ஏற்படுத்தப்படும்.

குடும்ப அரசியல் என்ற சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டதால், அதைக் கொண்டுதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலைமைக்குள் திமுக சிக்கிக் கொண்டு விட்டது.

மக்களைச் சந்திக்க அஞ்சாத திமுக தலைமை – மகனைச் சந்திக்க அஞ்சும் நிலைமை ஏற்பட்டிருப்பது திமுகவுக்கு ஏற்பட்ட சோகம்தான்!

அழகிரியும் கடந்த சில மாதங்களாக அமைதி காத்து, வேறு கட்சியில் சேராமல், தனிக் கட்சி தொடங்காமல், மிகச் சரியாக அரசியல் காய்களை நகர்த்தி வந்தார்.

அந்த வகையில் அஞ்சா நெஞ்சன் அழகிரி இல்லாமல் தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்ற அச்சத்தைத் திமுக தலைமைக்கு ஏற்படுத்தி,  மீண்டும் கட்சிக்குத் திரும்ப பாதை போட்டிருக்கும் அழகிரியின் அடுத்த அரசியல் காய் நகர்த்தல் எப்படியிருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்!

-இரா.முத்தரசன்