கொல்கத்தா- இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா திடீர் மாரடைப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 75. அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு அவர் அனைத்துலகக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
மேலும், அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தார். அண்மையில் தற்போதைய இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசன், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, ஜக்மோகன் டால்மியா மீண்டும் இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவராக அவர் சிறப்பாகப் பணியாற்றி வந்த வேளையில்,நேற்றிரவு அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே அவர் கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய ஆராய்ச்சி மையத்தில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டார்.
அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.