Home Featured நாடு அரசியல் பார்வை: மஇகா தொகுதித் தேர்தல்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, சுமுகமாக நடைபெற்றதற்கான காரணங்கள்!

அரசியல் பார்வை: மஇகா தொகுதித் தேர்தல்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, சுமுகமாக நடைபெற்றதற்கான காரணங்கள்!

526
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மஇகாவின் தொகுதித் தேர்தல்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் இன்று கட்சிக்கு வெளியே நிற்கும் எதிர்தரப்பாளர்கள் ஆகியோரின் கணிப்புகள் – எதிர்பார்ப்புகளுக்கு – மாறாக சுமுகமாகவும், அமைதியாகவும் நடைபெற்று வருகின்றன.

தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.  போட்டிகள் இருக்கும் தொகுதிகளில் மட்டும் தேர்தல்கள் அடுத்தவார இறுதிக்குள் நடைபெற்று முடியும்.

சுமுக சூழலுக்கு என்ன காரணங்கள்?

#TamilSchoolmychoice

MIC-logoதொகுதிகளில் சுமுகமான தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததற்கு சில காரணங்களை முன் வைக்கலாம்.

முக்கியமாக, முதற்காரணமாகக் கூறப்படுவது, பழனிவேல் தரப்பினரின் ஆதரவுக் கிளைகள் பல, இந்தத் தேர்தலில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டன என்பதுதான். எஞ்சியிருக்கின்ற கிளைகளில் பெரும்பான்மையானவை நடப்பு தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தருபவை என்பதால் பல தொகுதிகளில் சுமுகமான முறையில் நடப்புத் தலைமைத்துவங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

சில தொகுதிகளில் மாற்றங்கள் பிரச்சனையின்றி கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது காரணமாகக் கூறப்படுவது, தொகுதிகளில் உள்ள பல கிளைத் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே சமாதானமான முறையில் பேச்சு வார்த்தைகள் நடத்தி, தங்களுக்கிடையில் பதவிப் பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, தொகுதிகளில் போட்டிகள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதுதான்!

ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னர், கட்சி ஒரு நல்ல நிலைமைக்குத் திரும்பி, டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தில் முன்னேற்றகரமான பாதையில் கால்பதித்திருக்கும் இந்த காலகட்டத்தில், நமக்குள் மீண்டும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் – கட்சியில் அமைதியைக் கொண்டு வருவோம் என்ற நோக்குடன் பல கிளைத் தலைவர்கள் செயல்பட்டனர்.

அந்த அணுகுமுறையும், தொகுதிகளின் தேர்தல்கள் சுமுகமாக நடந்து முடிந்ததற்கான காரணமாகும்.

டாக்டர் சுப்ராவின் சமாதான முயற்சிகள்

Dr Subra - MIC PRESIDENTஇவை எல்லாவற்றையும் விட, தொகுதித் தேர்தல்கள் சுமுகமாக நடைபெற்று முடிந்ததற்கு, மஇகா வட்டாரங்கள் கூறுகின்ற மற்றொரு முக்கியக் காரணம், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் அரசியல் அணுகுமுறைதான்.

கடந்த சில வாரங்களாக, மாநிலம் வாரியாக, ஒவ்வொரு தொகுதியின் முக்கியப் பொறுப்பாளர்களை வரவழைத்து அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, அவர்களுடைய தொகுதிகளில் இருக்கும் போட்டிகள், பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்து அதற்கேற்ப அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கி, பல தொகுதிகளில் போட்டிகளைத் தவிர்த்தார் சுப்ரா என மஇகா தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசியத் தலைவரே அழைத்து ஆலோசனை வழங்குகின்றாரே என்ற நல்லெண்ணத்தில் பல கிளைத் தலைவர்களும் போட்டியிடாமல், சுப்ராவின் ஆலோசனையை ஏற்று ஒதுங்கிக் கொண்டனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த காலங்களில் இதுபோன்று நடைபெற்றதில்லை – அப்படியே நடைபெற்றாலும், தேசியத் தலைவருக்கு வேண்டப்பட்ட தீவிர ஆதரவாளர்களுக்கிடையே போட்டிகள் ஏற்பட்டால்தான் இதுபோன்ற பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சுப்ராவோ, ஒவ்வொரு தொகுதியாக பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் – தனக்கு மிக நெருக்கமான ஆதரவாளர்களைக் கூட சில சமயங்களில் விட்டுக் கொடுக்கச் செய்திருக்கின்றார் என்கின்றன மஇகா தலைமையகத்திலிருந்து கசியும் தகவல்கள்.

மற்ற தலைவர்களுடன் பகிர்ந்து முடிவெடுத்த சுப்ரா

Saravanan - MIC -அதைவிட முக்கியமாக, இவ்வாறு தொகுதித் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது – குறிப்பாக அரசியல் சர்ச்சைகள் மிகுந்த கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர் மாநிலத்தின் தொகுதிப் பொறுப்பாளர்களைச் சந்தித்தபோது –

கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களில் முக்கியமானவரான கருதப்படும் உதவித் தலைவரும், துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணனை உடன் வைத்துக் கொண்டுதான், டாக்டர் சுப்ரா பேச்சுவார்த்தைகள் நடத்தினார், பல முடிவுகள் எடுத்தார் என்றும் மஇகா பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, காலங் காலமாக மஇகாவை ஆட்டிப் படைத்து வந்த – அதன் ஆணிவேரையே சில சமயங்களில் அசைத்துப் பார்த்த – அணி என்ற பிணி தற்போதைக்கு மஇகாவில் தலையெடுக்காத சூழ்நிலையே மேலோங்கி உள்ளது.

சரவணனுடன், தலைமைச் செயலாளர், தலைமைப் பொருளாளர், நிர்வாகச் செயலாளர் போன்ற மற்ற முக்கிய மஇகா தலைமையகப் பொறுப்பாளர்களையும் அருகில் வைத்துக் கொண்டுதான் சுப்ரா தொகுதிப் பொறுப்பாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

இதன் காரணமாக, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் தொகுதிகளின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து கொள்ளவும், தங்களின் கருத்துகளை, ஆலோசனைகளை வழங்குவதற்கும் சுலபமான வழிமுறை ஏற்படுத்தப்பட்டது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் ஒருவரைக் குறை சொல்லும் போக்கும், எனக்குத் தெரியாமல் முடிவெடுத்து விட்டார்கள், எனக்கு எதிர்ப்பாக முடிவெடுத்து விட்டார்கள் என ஒரு சில தலைவர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ளும் வழக்கமான நடைமுறைகளும் இந்தப் பேச்சு வார்த்தைகள் மூலம் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன.

இவற்றின் காரணமாகத்தான், பெரும்பான்மையான மஇகா தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் சுமுகமாகவும், அமைதியாகவும், நடந்தேறி, பல தொகுதிகளில் போட்டியின்றி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில தொகுதிகளில் மட்டும் தவிர்க்க முடியாத நிலைமையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

அந்தப் போட்டிகளும் எதிர்வரும் வாரத்தில் சுமுகமாக நடைபெற்று முடிந்து விட்டால், அடுத்த கட்டமாக தேசிய நிலையிலான தேர்தல்கள் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

-இரா.முத்தரசன்