சென்னை- நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட சண்டையாக வைகோவுக்கும், திமுகவின் தானைத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் உருவெடுத்துள்ளது.
ஸ்டாலினும்- வைகோவும் – நட்பான தருணங்களின்போது…
வைகோவின் மதிமுகவிலிருந்து ஒரு சிலரைக் கொண்டு வந்து திமுகவில் சேர்க்கும் முயற்சியில் ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வர, திமுகவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை என்றும், அக்கட்சியை அழிக்க அதன் பட்டத்து இளவரசரே போதும் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ கடுமையாகக் குறை கூறியிருக்கின்றார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அறிஞர் அண்ணா தனது வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், திமுக தலைவர் கருணாநிதி தனது வாரிசுகளை அரசியலுக்கு கொண்டு வந்ததால் ஊழல் பெருகிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
ஸ்டாலின் தம்பி மு.க.தமிழரசு இல்லத் திருமணத்திற்கு வைகோவுக்கு அழைப்பு வழங்கியபோது….இப்போதோ தலைகீழ் நிலைமை…
“திராவிட இயக்கத்தால் தமிழகம் மோசமாகிவிட்டது என்கிற விமர்சனம் எழுவதற்கு திமுகவும், அதிமுகவும்தான் காரணம். எனவேதான் அவ்விரு கட்சிகளில் இருந்தும் மதிமுக விலகி நிற்கிறது. அக்கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைத்தால் ஒட்டுமொத்த திராவிட இயக்கமும் தூற்றுதலுக்குள்ளாகும்” என்று வைகோ கூறியுள்ளார்.
திமுக முடிந்து போன வழக்கு என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்தக் கட்சியில் உள்ள பலர் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“அந்தக் கட்சியை அழிக்க திமுக தலைவரின் மகனே போதும். பட்டத்து இளவரசராக அறிவித்திருக்கிறார்களே (ஸ்டாலின்), அவரே கட்சியை அழித்துவிடுவார். பொறுத்திருந்து பாருங்கள்” என்று வைகோ காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.