சென்னை – மதிமுகவின் முக்கிய நிர்வாகி பாலவாக்கம் சோமுவின் விலகல் கூட வைகோவின் காதுகளுக்கு ஏற்கனவே எட்டி இருந்தது. ஆனால், கட்சியுடன் நகமும் சதையுமாக இருந்த பொருளாளர் மாசிலாமணியின் விலகல் தான் வைகோ சற்றும் எதிர்பார்க்காத ஒன்றாகி விட்டது.
கடந்த மாதம் வரை, அறிவாலயத்தின் பக்கம் ஒதுங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வந்த வைகோவிற்கு திமுக கொடுத்துள்ள அதிர்ச்சியால், இப்போது அங்கும் போக முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் திமுக-வை தாக்கியும், ஜெயலலிதாவை புகழ்ந்தும் பேசியுள்ளது, தமிழக அரசியல் நாம் யூகித்தபடி பயணிப்பதாகவே தோன்றுகிறது. அவர் அளித்துள்ள பேட்டியில், “முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது. சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து முல்லைப் பெரியாறை பாதுகாத்தவர் ஜெயலலிதா”
“திமுக தலைமையின் அதிகார அரசியல் முடிந்துவிட்டது. திமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, பட்டத்து இளவரசரே(ஸ்டாலின்) போதும்” என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், வைகோ புயல் போயஸ் தோட்டத்தின் பக்கம் கரை ஒதுங்குவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.