ஜோகூர்பாரு – ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மஹ்ரம் சுல்தான் இஸ்கந்தரை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேரில் சந்தித்துப் பேசினார். ஜோகூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடச் சென்ற பிரதமர், அங்கு சுல்தானையும் சந்தித்துள்ளார்.
ஜோகூர் இளவரசர், ஜோகூர் சுல்தான் ஆகியோருடன் நஜிப் (நஜிப் டுவிட்டர் படம்)
இதையடுத்து டாங்கே பேயில் இருவரும் மதிய உணவை உட்கொண்டனர். பின்னர் ஜோகூர் பாரு கடலோரப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, குறிப்பாக சீன கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுள்ள பணிகளை இருவரும் பார்வையிட்டனர்.
ஜோகூர் பாருவில் செல்வாக்குடன் திகழும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் துணைப் பிரதமர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார். அவரது நீக்கத்திற்குப் பின்னர் அமைச்சரவையை மாற்றியமைத்தார் பிரதமர் நஜிப்.
இந்த நீக்கம் மற்றும் மாற்றத்துக்குப் பின்னர் முதன் முறையாக சுல்தானை சந்தித்துப் பேசியுள்ளார் நஜிப் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் இடையேயான சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
அண்மைக்காலமாக ஜோகூர் இளவரசர் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக சில கருத்துக்களை கூறி வருகிறார். அவற்றுக்கு நஜிப் அமைச்சரவை சகாக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையிலேயே அம்மாநில சுல்தானை சந்தித்துப் பேசியுள்ளார் நஜிப். இந்தச் சந்திப்பின் வழி இரு தரப்புகளுக்கும் இடையிலான அரசியல் சூடு சற்றே தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.