கோலாலம்பூர்- வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி குறித்து சில வெளிநாடுகள் மேற்கொள்ளும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டால், தற்போதுள்ள அனைத்துலக சட்டங்களின் கீழ் நஜிப் கைதாகலாம் என்றார் அவர்.
“உள்ளூர் சட்டங்கள் என்பன உள்ளூரில் நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் சில குற்றங்கள், குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நாட்டுடன் தொடர்புடையதாக இருப்பின், அக்குற்றம் தொடர்பாக விசாரிக்கவும், தண்டிக்கவும் அந்த நாட்டுக்கு உரிமையுண்டு” என்று அரசு சாரா இயக்கங்களுடனான ஒரு சந்திப்பின்போது மகாதீர் கூறினார்.
சூடான் அதிபர் ஓமார் அல் பஷிருக்கு எதிராக இன அழிப்பு தொடர்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார்.
“பண முறைகேட்டில் பிரதமர் நஜிப்புக்கு தொடர்புள்ளதாக கருதும் பட்சத்தில் சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்துலக காவல்துறையை (இண்டர்போல்) அணுகி நஜிப்பை கைது செய்யக் கோரலாம். எவ்வாறு ஒருசிலர் மலேசியாவில் இருந்து வெளியேற முடியாது தடுக்கப்பட்டனரோ, அதேபோல் நஜிப்பும் மலேசியாவிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் வெளிநாடு சென்றால் அவர் கைதாகக்கூடும்” என்று மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் சுவிட்சர்லாந்தைத் தவிர வேறு எந்த நாடும் 1எம்டிபி விவகாரம் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியொன்றில், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வுத் துறை 1எம்டிபி தொடர்பில் விசாரணையைத் தொடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.