நியூ யார்க் – “நாங்கள் ஏறக்குறைய 11 மில்லியன் கார்களில், மாசுக்கட்டுப்பாட்டிற்காக புதிய மென்பொருளை மேம்படுத்தினோம். அந்த மென்பொருள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கார்களை பரிசோதனை செய்யும் போது, ‘கிளீனர் மோடில்’ (cleaner mode) வைத்துக் கொள்ளும். அதன் பிறகு, மாசுக் கட்டுப்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள அளவீடுகளை விட 40 மடங்கு அதிக அளவு புகையை வெளியிடும். எங்களின் இந்த செயலுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” – இப்படி ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டு இருப்பது பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் தான்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை தான், முதன் முதலில் வோக்ஸ்வாகனின் இந்த மோசடியை அம்பலப்படுத்தியது. மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, அந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தனது தவறை மறைப்பதற்காக அந்நிறுவனம் சுமார் 7.3 பில்லியன் டாலர்கள் மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, அந்நிறுவனம் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனம், 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியான பிறகு, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்துவிட்டன. மேலும், அமெரிக்கா மட்டுமில்லாமல் தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளும், வோக்ஸ்வாகன் கார்களை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது.