Home Featured கலையுலகம் ‘யட்சன்’ பாணியில் தமிழ் நாவல்களிலிருந்து உருவான 7 தமிழ்ப் படங்கள்!

‘யட்சன்’ பாணியில் தமிழ் நாவல்களிலிருந்து உருவான 7 தமிழ்ப் படங்கள்!

959
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘யட்சன்’ திரைப்படம் ஆனந்த விகடன் வார இதழில், இரட்டை நாவலாசிரியர்கள் சுபா எழுதி, வெளிவந்த தமிழ் நாவலாகும்.

தமிழ் நாவல்கள் திரைப்படங்களானது மிக அபூர்வம் என்றாலும், முதலில் நாவலாக வெளிவந்து வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றுப் பின்னர் தமிழ்ப் படங்களாக வெளிவந்த,  நினைவில் நிற்கும் 7 தமிழ்ப்படங்களைப் பார்ப்போமா?

# 1 – “பாவை விளக்கு” – அகிலன்

#TamilSchoolmychoice

Paavai Vilaku posterதமிழின் மிக முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவராகக் கருதப்படும் அகிலன் எழுதிய நாவல் ‘பாவை விளக்கு’. அகிலனின் பாவை விளக்கு நாவல் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்து, இனிய பாடல்களால் இன்று வரை நினைவில் நிற்கும் படம்.

இதே அகிலன்தான், மலேசியாவுக்கு வருகை தந்து இங்குள்ள இரப்பர் மரத் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் ‘பால்மரக் காட்டினிலே’ என்ற நாவலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

# 2 – “முள்ளும் மலரும்” – உமா சந்திரன்

Mullum Malarum posterஉமா சந்திரன் என்ற அதிக பிரபல்யம் இல்லாத நாவலாசிரியரின் நாவல் அன்றைய வித்தியாச இயக்குநர் மகேந்திரனைக் கவர, ரஜினிகாந்த் நடிப்பில் அதே பெயரில் உருவானது.

ரஜினியின் தங்கையாக ஷோபா நடிக்க, சிறந்த ஒளிப்பதிவை பாலு மகேந்திரா வழங்க, இனிய இசையை இளையராஜா முழங்க, இன்று வரை தமிழின் மிக முக்கியப் படங்களில் ஒன்றாக, ரஜினியின் சிறந்த நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்றாக கருதப்படுவது ‘முள்ளும் மலரும்’.

# 3 – “47 நாட்கள்” – சிவசங்கரி

47 Natkal posterவெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் தமிழக மக்கள் மோகம் கொண்டு கிடந்த காலகட்டத்தில் சிவசங்கரி எழுதிய 47 நாட்கள் நாவல், வெளிநாட்டுக்குக் கல்யாணம் செய்து கொண்டு சென்று, ஒரு பெண் அங்கு படும் அவதிகளை, கொடுமைகளைப் படம் பிடித்துக் காட்டி, வாசகர்களை உலுக்கியது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமான 47 நாட்கள், அழகான ஜெயப்பிரதாவின் மிரட்சியான நடிப்பில், இரசிகர்களைக் கவர்ந்தது. கொடுமைக்கார கணவனாக இன்றைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க, ஜெயப்பிரதாவைக் காப்பாற்றுபவராக சரத்பாபு நடித்திருந்தார்.

# 4 – “பிரியா” – சுஜாதா

Sujatha writerதமிழின் மிக முக்கிய இலக்கியப் படைப்பாளரான சுஜாதா (படம்) பல தமிழ்த் திரைப்படங்களின் கதை-திரைக்கதை-வசனம் உருவாக்கங்களில் பங்காற்றியவர்.

அவரது அதிகம் பிரபலமில்லாத நாவல் ‘பிரியா’. ஆனாலும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கைவண்ணத்தில், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி இணை நடிப்பில், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாட்டுப் படப்பிடிப்புகளோடு, வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது இப்படம்.

# 5 – சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

Jayakanthan young lookதமிழ் இலக்கிய உலகில், சர்ச்சை மிகுந்த உள்ளடக்கத்தால் பிரபலமடைந்த சிறுகதை ஜெயகாந்தனின் (படம்)  ‘அக்கினிப் பிரவேசம்’. இதுவே, பின்னர் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக உருவாகியது.

பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் இலட்சுமி-ஸ்ரீகாந்தின் அபார நடிப்பால் பிரபலமாகப் பேசப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.

# 6 – ‘மூடுபனி’ – ராஜேந்திர குமார்

Balu Mahendraநாவலாசிரியர் ராஜேந்திர குமார், நமது மலேசியாவில் அமரர் முருகு சுப்ரமணியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘புதிய சமுதாயம்’ பத்திரிக்கையில் தொடராக எழுதிய நாவல்தான் ‘மூடுபனி’.

பின்னர் பாலு மகேந்திராவின் அபாரமான ஒளிப்பதிவில்-இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது. பிரதாப் போத்தன் – ஷோபா நடிப்பில் வெளிவந்த படம் ‘மூடுபனி’

# 7 – “கயல்விழி” – அகிலன் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

Madurai Meeta Sundrapandiayan posterஎம்ஜிஆரின் வரலாற்றில் அவர் நடித்த இறுதிப் படம் என்ற அளவில் மறக்க முடியாத படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இது அகிலனின் ‘கயல்விழி’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதை பலரும் மறந்திருப்பார்கள்.

பிரபல இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கி முடிப்பதற்கு முன்பே அகால மரணமடைந்துவிட – எம்ஜிஆரோ படத்தை முடிக்க சில காட்சிகள் இருக்கும்போதே – அதிமுக பெரும்பான்மை இடங்களை சட்டமன்றத்தில் பெற்று, அவர் முதல்வராகப் பதவியேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியேற்பு விழாவை பத்து நாட்கள் தள்ளி வைத்து, இரவு பகலாக நடித்து, தான் முடிக்க வேண்டிய காட்சிகளை நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் முதல்வரான பின்னர் வெளியே வந்த படம் என்பதோடு, அவர் முழுமையாக கதாநாயகனாக நடித்த இறுதிப் படம் என்பதாலும் நினைவில் நிற்கும் படமாகின்றது மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

  • செல்லியல் தொகுப்பு