Home இந்தியா நேதாஜி பற்றி அவதூறான செய்தி: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு!

நேதாஜி பற்றி அவதூறான செய்தி: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு!

591
0
SHARE
Ad

080715_subraமதுரை – நேதாஜி குறித்து அவதூறு பரப்பிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட  மதுரை உயர்நீதிமன்றம், இது குறித்துப் பதில் அளிக்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகுமீனா. பாரதீய சுபாஷ் சேனா அமைப்பின் மாநில அமைப்பாளரான இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி  தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், அவர் ரஷ்யாவில் 1953-ஆம் ஆண்டு சைபீரியா சிறையில் தூக்கிலிடப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்குத் தெரியும் என்றும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

நேதாஜி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையம் விமான விபத்தில் தான் நேதாஜி இறந்தார் என அறிக்கை அளித்துள்ளது. மேலும், 1967 ஆம் ஆண்டு வரை நேதாஜி உயிருடன் இருந்ததற்கான ஆவணங்கள் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

எனவே நேதாஜி புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சுப்பிரமணியன் சுவாமி அவதூறான தகவலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அருப்புக்கோட்டைகாவல்துறை அதிகாரி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தேன்.

அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், சுப்பிரமணிய சுவாமி மீது உயர்நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா,இதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று விவரம் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு,அடுத்த விசாரணையை வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.