கோலாலம்பூர் – தனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு கிடைக்க வீதிப் போராட்டங்கள் நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் பணம் கொடுத்துள்ளார் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து நேற்று மகாதீர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நஜிப் தனக்கு மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து வீதிப் போராட்டங்களை நடத்த வைத்துள்ளார் என்றும், தான் பதவி விலகக் கூடாது என்பதற்காக சட்டத்திற்குப் புறம்பான வகையில் இந்த போராட்டங்களை நடத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த செப் 16 அன்று நடைபெற்ற சிவப்புச் சட்டைப் பேரணிக்கு தான் நஜிப் பணம் கொடுத்தார் என்று மகாதீர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
சிவப்புச் சட்டைப் பேரணிக்காக பிரதமர் நஜிப், 3 மில்லியன் ரிங்கிட்டுக்கான காசோலையை அதன் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கியதாக கூறப்பட்டது.
எனினும், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி மலாய் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜமால் யூனுஸ் விடுத்த அறிக்கையில், நஜிப்புக்கும், பேரணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.
ஆனால், கடந்த செப்டம்பர் 20 -ம் தேதி நஜிப் விடுத்த அறிக்கை ஒன்றில், அம்னோவின் வலிமையைக் காட்டவே இந்தப் பேரணி என்று வெளிப்படையாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.