நியூயார்க் – ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா) கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று “நிலைக்கத்தக்க வளர்ச்சி” என்ற தலைப்பிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முழுக்க முழுக்க இந்தியில் அவரது உரை அமைந்திருந்தது. உரையை நிறைவு செய்யும் போது “அனைவரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற பொருள்படும் சமஸ்கிருத சுலோகம் ஒன்றைக் கூறினார் மோடி.
தனது உரையின்போது ஐநாவின் பாதுகாப்பு மன்றம் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திய மோடி, தொடர்ந்து பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்துக்கான காரணங்களையும் விளக்கினார்.
உலகில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக வளர்ச்சியடைந்த நாடுகள், ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும் என்றும் மோடி தனது உரையில் கூறினார்.
பூமியைத் தாய் எனக் கருதும் கலாச்சார மண்ணிலிருந்து தான் வந்திருப்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட மோடி, இயற்கைப் பேரிடர்களால் இன்னல்களுக்கு உள்ளாகும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலான திட்டங்களை இந்தியா தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.