நியூயார்க் – ஐநா பொதுப் பேரவையின் 70-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் இன்று காலையில் நியூயார்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும், இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் சிறிசேனாவிடம் மோடி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது: “இருவரது சந்திப்பின் போது,ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெற வில்லை. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மோடி, சிறிசேனாவிடம் வலியுறுத்தினார்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பது இயற்கையானது. அதே நேரத்தில் இலங்கையின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது. இலங்கை விவகாரத்தில் நடுநிலையுடன் தீர்வு காணும் வழி கண்டறியப்படும்” என்று சூசகமாகக் கூறியுள்ளார்.
இதனால் இந்தியா, இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது எனது புலனாகிறது.