கோலாலம்பூர்- அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபுஹாசானின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் (படம்) இன்று திங்கட்கிழமை கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கைருடின் வழக்கு தொடர்பாக மத்தியாஸ் தனது விளக்கத்தை அளிக்க வருமாறு, அந்த வழக்கை விசாரிக்கும் புக்கிட் அம்மான் தலைமையக காவல்துறை அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட அதே கதி தமக்கும் ஏற்படலாம் என அஞ்சுவதாக மத்தியாஸ் கூறியுள்ளார்.
“கைருடின் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டாரோ அதே போன்று நானும் கைது செய்யப்படலாம் என நம்புகிறேன். எனினும் கைது நடவடிக்கைக்கு நான் அஞ்சவில்லை.
கைருடின் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் உடலளவில் சோர்வாக இருந்தாலும் மனதளவில் தைரியமாக உள்ளார்” என்று மத்தியாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கெதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைருடின், சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியாஸ் சாங் முன்னாள் பிரதமர் மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவருடைய அரசியல் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைருடின் கைதும், மத்தியாஸ் சாங் மீதான காவல் துறை விசாரணைகளும் மகாதீருக்கு எதிரான மறைமுகமான நெருக்குதல்களாகப் பார்க்கப்படுகின்றது.