சென்னை – அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்ற திட்டங்களைத் தொடர்ந்து தற்போது அம்மா கைபேசிகள் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதாவது, மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு இலவசமாக அம்மா கைபேசிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. மகளிருக்குச் சமூகப் பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 1991-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன.
அந்தச் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.இந்தச் சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாயச் சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் உள்ளனர்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமித்தல், அவர்களுக்குள் கொடுத்து வாங்கிக் கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்குப் பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.
அந்த விவரங்களைப் பதிவேடுகளில் பதிவு செய்யவும், அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்றை உருவாக்கப்படும்.அந்த மென்பொருள் இடம் பெற்ற கைபேசிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும். இதற்கு அம்மா கைபேசித் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.