புதுடில்லி – காலஞ்சென்ற அப்துல் கலாம் அவர்களின் பேரன் ஷேக் சலீம், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இவர் அப்துல் கலாமின் உடன்பிறந்த சகோதரர் முகம்மது லெப்பை மரைக்காயரின் மகன் வழிப் பேரன் ஆவார். 30 வயதான இவர் ஓர் எம்பிஏ பட்டதாரியாவார்.
இவர் கடந்த மூன்றாண்டுகளாக டில்லியிலுள்ள அப்துல் கலாம் இல்லத்தில் அப்துல் கலாமுடன் தங்கி இருந்தார். அங்கிருந்தபடி சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படித்து வந்தார்.
அப்துல் கலாம் மறைவிற்குப் பிறகும் டில்லியிலேயே தங்கியிருந்த இவர், நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.
பாஜக-வில் சேர்ந்தது பற்றி இவர் கூறியதாவது: “தாத்தாவின் லட்சியங்களைச் செயல்படுத்தும் இயக்கமாகப் பாஜக இருந்ததால் அதில் இணைந்துள்ளேன். பதவிகளுக்கு ஆசைப்பட்டு பாஜக-வில் சேரவில்லை. பொது மக்களுக்குச் சேவை செய்ய ஏதுவாகவே கட்சியில் சேர்ந்துள்ளேன்.
சாதாரணத் தொண்டனாகப் பணியாற்ற வேண்டும் என்பதே எண்ணம். பாஜக தலைமை விரும்பி, எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று மக்கள் பணியாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.