சென்னை – தனியார்ப் பண்பலை வானொலி (எப்.எம் ரேடியோ) ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும், எப்.எம். ரேடியோ ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்கக் கூடாது என மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
எப்.எம்.ரேடியோ ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்தது. இதை எதிர்த்து சன் குழுமம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது.இம்மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், எப்.எம்.ரேடியோ ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி அளித்திருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய அமர்வு, ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு செல்லும் என நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.