கிள்ளான் – கடந்த அக்டோபர் 2 தொடங்கி அக்டோபர் 4 வரை, 3 நாட்களுக்குத் தொடர்ந்து ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற ஆஸ்ட்ரோவின் மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சியில் அக்டோபர் 4-ஆம் தேதி டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலை நிகழ்ச்சி களை கட்டியது.
மாலை மணி 7.00-க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்கள் தங்களுடைய இரசிகர்களுக்கு இடைவிடாத உற்சாகமான ஆடல் பாடல்களுடன் நிகழ்ச்சியை கலகலப்பாவும் விறுவிறுப்பாகவும் வழிநடத்தினர். இந்நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம்,கவிமாறன், சுரேஷ், கீதா, ஷாலு, அகிலா, யாசினி, ஜெய் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதே வேளையில், நாடறிந்த கலைஞர்களான ‘ஹாவோக் பிரதர்ஸ்’ (HAVOC BROTHER’S), மணி வில்லன்ஸ் மற்றும் காய்த்திரி தண்டபாணி படைப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
ஆடல், பாடல்கள் தவிர்த்து, நிகழ்ச்சியை இன்னும் உற்சாகமாகக் கொண்டு செல்ல வந்திருந்த இரசிகர்களுக்குச் சுவாரஸ்மான பல விளையாட்டுப் போட்டிகளை ராகாவின் அறிவிப்பாளர்கள் ஏற்றி நடத்தினர். வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகளும் டி.எச்.ஆர் ராகாவின் தலைவர் சுப்பிரமணியம் வீராசாமி எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது இணையத் தளங்களின் வழி தங்களுக்கான முத்திரைகளைப் பதித்து வரும் சாதனையாளர்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் ஏற்பாடு செய்திருந்த விருது நிகழ்ச்சி இடம்பெற்றது.
அந்த வகையில், செல்லியலின் இணை நிறுவனரும், நிர்வாக ஆசிரியருமான ஆர்.முத்தரசன் மற்றும் இணையத்தில் மிகப்பெரிய, பழமையான மற்றும் செல்வாக்கு நிறைந்த இணைய சமூகமான Lowyat.NET-ஐ உருவாக்கியவர் மலேசியாவைத் தாயகமாக கொண்ட தொழிலதிபர் விஜந்திரன் ராமதாஸ் ஆகிய இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
அவ்விருதுகளை அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து வழங்கி கௌரவித்தார்.