Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல் சமரசத்தில் முடிய வாய்ப்பு! பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன!

நடிகர் சங்கத் தேர்தல் சமரசத்தில் முடிய வாய்ப்பு! பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன!

562
0
SHARE
Ad

sarath - nasar_0சென்னை – நடிகர் சங்கத்தேர்தலில் இரு அணிகளும் மோதிக் கொண்டு அதில் ஒரு அணி வெற்றி பெற்று வாழ்நாள் முழுவதும் இரு அணிகளுக்குள்ளும் பகையுணர்வு வந்துவிடுமோ என்று அஞ்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இது குறித்து சங்கங்கள் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நடிகர்சங்கத் தேர்தல் நடைபெறாமல் சமரச முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அவ்வறிக்கையில் கூறியிருப்பதாவது, “ பல முன்னணி நடிகர்களால் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த நடிகர் சங்கத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அமைதியாக நடைபெற்று தேர்தல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைகொடுத்து கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக் கொள்வர்.

#TamilSchoolmychoice

தயாரிப்பாளர், இயக்குநர், தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட யூனியன்களுடன் இணக்கமாக நட்புறவு பாராட்டி வருவது நடிகர் சங்கம் மட்டுமே! சங்கத் தேர்தல் என்றவுடன் அனைவரின் பார்வையும் இங்கே திரும்பிவிட்டது. எனவே தேர்தலில் சுமுக முடிவு எடுக்கவும், இரு அணி சார்பிலும் ஒருவர் மீது ஒருவர் அறிக்கைப் போர், போட்டிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என இந்தக் கூட்டறிக்கை வாயிலாக கேட்டுகொள்கிறோம்.

திரையில் தோன்றி மக்களை பரவசப்படுத்தும் நடிகர்கள், அவர்களைப் பின்பற்றும் ரசிகர்கள், பண முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் நடிகர் சங்கத் தேர்த்லை கண்காணித்து வருகின்றனர். இரு அணியிலும் போட்டியிடும் அனைவருமே எங்களுக்கு நண்பர்கள்.

நடைபெறவிருக்கின்ற நடிகர் சங்கத் தேர்தல் மூலமாக இரு அணியுமே நிரந்தரமாக எதிரெதிராக மாறிவிடுவார்களோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரையும் சாராத பொதுவான திரைக் கலைஞர்கள் இதே கவலையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஆகவே எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமாக இந்த ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியை தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியன  ஈடுபட்டுள்ளது.

ஆகவே வரும் சனிக்கிழமை அன்று இரு அணியினரையும் அழைத்து பேசி ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்பட ஒரு கூட்டுக்குழு முயற்சிக்கிறது, விரைவில் நல்லமுடிவு பெற்றப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.