கோலாலம்பூர் – கடந்த அக்டோபர் 1-ம் தேதி, விஜய் நடிப்பில் ‘புலி’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனமும், பெரும்பாலான விமர்சகர்கள் மத்தியில் படம் படும் மொக்கை என்றும் பெயர் எடுத்தது.
அது தான் சாக்கு என்று விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் டுவிட்டர், பேஸ்புக்கில் ஒருவருக்கொருவர் வரிந்துகட்டிக் கொண்டு மாறி, மாறி வார்த்தைகளைப் பிரயோகித்தனர்.
அதற்குள் அஜித்தின் வேதாளம் முன்னோட்டம் வெளியாகி இவ்விவகாரத்தில் மேலும் எண்ணெய் ஊற்றியது.
ஒருவழியாக, பிரச்சனை மெல்ல ஓய்ந்து வரும் நிலையில், நேற்று புலி படம் குறித்து டி.ராஜேந்தர் கூறியிருக்கும் கருத்து, வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாக பிரச்சனையை மீண்டும் ஊதி நெருப்பு மூட்டியுள்ளது.
“நான் குடும்பத்துடன் ’புலி’ படத்தைக் கண்டுகளித்தேன். சிரித்து மகிழ்ந்தோம். சிலர் வேண்டும் என்றே இந்த படத்தைப் பற்றி தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார்கள். அவர்கள் ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள் பொறாமை காரணமாக இப்படி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானே அதற்கான முயற்சிகளில் இறங்குவேன்” என்று கூறியிருக்கிறார் நம்ம டி.ஆர்.