Home Featured கலையுலகம் இந்தியக் காற்பந்து – விளம்பர தூதுவராகும் தனுஷ்!

இந்தியக் காற்பந்து – விளம்பர தூதுவராகும் தனுஷ்!

634
0
SHARE
Ad

Maari-Danush-Posterசென்னை – இப்போதெல்லாம் ஒரு சினிமா நடிகர் புகழின் உச்சத்தைத் தொட்டுவிட்டால், அவருக்கு விளம்பரங்களின் மூலமாகவும் கணிசமான வருமானம் கிடைத்து விடுகின்றது.

அந்த வகையில் பல பொருட்களின் விளம்பரங்களில் இடம் பெறும் நடிகர்கள், சில நிகழ்ச்சிகள், விளையாட்டுகளுக்கும் விளம்பரத் தூதுவராக உருவெடுக்கின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே மாற்றி வைத்தது டி-20 விளையாட்டு முறை. அந்த டி-20 விளையாட்டு முறையைப் பயன்படுத்தி இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் மூலம் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் தங்கள் பக்கம் திருப்பினர் அதன் ஏற்பாட்டாளர்கள்.

#TamilSchoolmychoice

“இந்தியன் சூப்பர் லீக்” காற்பந்து 

தற்போது அதே பாணியில் இந்தியக் காற்பந்து போட்டிகளும் “இந்தியன் சூப்பர் லீக்” என்ற பெயரில் பல்வேறு நகர்களில் அக்டோபர் 3 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றது.

Indian Super Leagueஇரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டிகளின் விளம்பரத் தூதுவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் உட்பட பல இந்தித் திரையுலகப் பிரபலங்கள் இந்தப் போட்டிகளில் விளையாடும் காற்பந்து குழுக்களில் முதலீடு செய்திருக்கின்றன.

ஐஎஸ்எல் என்று அழைக்கப்படும் இந்தியக் காற்பந்து சூப்பர் லீக் போட்டிகள் மூலம், காற்பந்து விளையாட்டு இந்தியாவில் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேரலை தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் மூலம் இப்போது இந்தியாவில் அதிக அளவில் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகளையும், ஐரோப்பிய நாடுகளின் காற்பந்து போட்டிகளையும் இந்திய இரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளதால், காற்பந்து மோகம் இந்தியாவிலும் தற்போது அதிகரித்து வருகின்றது.

இதற்கிடையே, இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து போட்டிகளின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துரைத்துள்ள தனுஷ், சிறு வயது முதலே தான் காற்பந்து விளையாட்டின் இரசிகன் என்றும் சிறுவயதில் தெருக்களில் காற்பந்து விளையாடி மகிழ்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

“ஐ.எஸ்.எல். போட்டி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டில் நிறைய திறமையான புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். நமது நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் தான் பிரபலமாக விளங்குகிறது. இந்தப் போட்டியின் மூலம் கால்பந்து ஆட்டம் நிச்சயம் பிரபலம் அடையும்” என்றும் தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய ஐஎஸ்எல் காற்பந்து போட்டிகளின் கோலாகலத் தொடக்க விழாவை ரஜினிகாந்த் தொடக்கி வைத்தார்.

-செல்லியல் தொகுப்பு