Home Featured தமிழ் நாடு முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறாரா ஸ்டாலின்? – திமுகவில் மீண்டும் பரபரப்பு!

முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறாரா ஸ்டாலின்? – திமுகவில் மீண்டும் பரபரப்பு!

544
0
SHARE
Ad

Stalin-Erode-Namakku Nameகோவை- வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் பட்சத்தில், முதல்வர் பதவியை பிடிப்பதில் மு.க.ஸ்டாலின் முனைப்பாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தமது இந்த விருப்பத்தை கோவையில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பின்போது நாசூக்காக வெளிப்படுத்தியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நமக்கு நாமே என்ற பெயரில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் கோவையில் அவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
“தேர்தலுக்கு முன் மக்களைச் சந்திக்கும் நீங்கள், தேர்தலுக்குப் பிறகும் எங்களைச் சந்திக்க வருவீர்களா? திமுக வெற்றி பெற்றால் யார் முதல்வர்?” என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தேர்தலில் வெற்றி பெறுவதே திமுகவுக்கு முக்கியம்” என்றார். “நான் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்த்து மக்களைச் சந்திக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகும் மக்களைச் சந்திப்பேன். என்னைப் பொறுத்தவரை மக்களைச் சந்திப்பதே மகத்தான பணி” என்றார் ஸ்டாலின்.

#TamilSchoolmychoice

“தற்போதுள்ள சூழலில் தேர்தலில் வெற்றி பெறுவது தான் திமுகவுக்கு மிக முக்கியம். முதல்வர் யார் என்பதை பிறகு பார்த்துக் கொள்வோம்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

திமுகவில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஏற்க முடியாது என மு.க.அழகிரி தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், திமுக வெற்றி பெற்றால் அடுத்த முறையும் கருணாநிதியே முதல்வர் என அறிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின்.

அதன் பிறகும் கருணாநிதி தான் முதல்வர் என்று கூறி வந்த நிலையில், திடீரென முதல்வர் யார் என்பதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று ஸ்டாலின் கூறியிருப்பது திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சந்திப்பின் மூலம் அவர் தன் மனதில் உள்ள விருப்பத்தை திமுக தலைவருக்கு உணர்த்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

(படம்: ஈரோட்டில் மாணவர்களுடன் கலந்துரையாடும் ஸ்டாலின் – டுவிட்டர் படம்)