சென்னை – ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திமுக தலைவர் கருணாநிதி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, வைரமுத்துவின் நண்பராகவும், தமிழ் பற்றாளராகவும் கலந்து கொண்ட கமல்ஹாசன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
கமலை வைத்து கருணாநிதி அரசியல் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க, கருணாநிதியோ கடைசி வரை தமிழ் அறிஞராகவே விழாவை நிறைவு செய்தார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக வைரமுத்து உரையில் லேசாக அரசியல் நெடி அடித்தது.
விழாவில் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசியதாவது:-
“பெரியாருடனும், அண்ணாவுடனும் பல்வேறு தலைவர்களுடனும் அமர்ந்திருந்த கருணாநிதி அருகில் நானும், கமலும் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. களைப்பு என்பது உடலுக்கு இருக்கலாம். ரத்தமும், சதையும் ஆனதுதானே உடல். ஆனால், மூளை களைத்துப் போகாது. கருணாநிதிக்கு களைப்பும் வராது” என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “கருணாநிதியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது தெரியுமா? நம் போன்ற நட்புகள் அல்ல. அவரின் 60 ஆண்டு கால அரசியல் எதிரிகள் தான். எதிரிகள் இல்லை என்றால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. எதிரிகள் தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்” என்று அவர் அரசியல் கலந்து பேசியதும் கைதட்டல்கள் அரங்கத்தை அதிரச் செய்தன.
கருணாநிதியின் பாராட்டு
வைரமுத்து குறித்து கருணாநிதி பேசுகையில், “கவிஞர் வைரமுத்துவின் எழுத்து பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்பே ‘வைரமுத்து கவிதைகள்’ என்ற புத்தகத்தின் அணிந்துரையில் நான் எழுதும் போது, கருப்பு மனிதனுக்குள் நெருப்புப் பிழம்பா?, இதய பைக்குள்ளே எத்தனை கர்ப்பப்பைகள், மூளைக்குள்ளே எத்தனை விதைகள்? என்று எழுதி இருந்தேன்” என்று அவர் பாராட்டிப் பேசினார்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-
“கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் தமிழ் அழகு இருக்கும். திருக்குறள், நாலடியார் ஆகியவற்றையும் நான் சிறுகதைகளாகத்தான் பார்க்கிறேன். வைரமுத்து எழுதிய இந்த கதைகளில் நிஜமும் இருக்கிறது. மனிதநேயமும் இருக்கிறது. ஆனாலும் சொல்ல வேண்டிய விஷயத்தை கருத்து மாறாமல் கூறியிருக்கிறார்.”
“எனக்கும் புத்தகம் வெளியிட ஆசை உண்டு. எழுதியும் வருகிறேன். நான் ரகசியமாக முதல் பிரதியை வைரமுத்துவிடம் காட்டுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.