புத்ராஜெயா- 1எம்டிபி விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறியதாக முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் ஆகியோர் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர்.
இன்று புத்ராஜெயாவில் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசின், முன்னாள் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷபி அப்டால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த சந்திப்பில், முன்னாள் கெடா மந்திரி பெசார் சனுசி ஜுனுட் மற்றும் முன்னாள் மசீச தலைவர் ஓங் தி கியாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் மேலும் இருவர் மீது கைருடின் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட கைருடினை, காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், நாட்டின் வங்கி மற்றும் நிதி முறைகளை சீர்குலைக்க முயன்றதாக அவர் மீதும், அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.