காத்மாண்டு – நேபாள நாட்டில் சமீபத்தில் புதிய அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்டது. மன்னராட்சிக்கு முற்றிலும் முடிவு கட்டப்பட்டு, மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம், உலக அளவில் முதல் இந்து நாடாக அறிவிக்கப்பட்டது நேபாளம் தான். ஆனால், நேபாளம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது இந்திய அரசிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் மாதேசிகள் எனப்படும் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர், புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தால் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவோம் என்று கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் வெடித்த பெரும் வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தடையால் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கும் லாரிகள்
இந்த வன்முறைக்கு மூலக்காரணமே இந்தியா தான் என நேபாள மக்களும், அந்நாட்டு ஊடகங்களும் குற்றம்சாட்டின. நேபாள அரசும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்தியாவை கேட்டுக் கொண்டது.
இது இந்திய அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்த, நேபாளத்திற்கு இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து பொருட்களுக்கும் அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்தது. ஏறக்குறைய பொருளாதாரத் தடை என்ற அளவில் இருக்க, இது அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் இந்த செயல் நேபாள நாட்டு மக்களையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் ஆத்திரமூட்டியது. அதனைத் தொடர்ந்து நேபாளம் உடனடியாக உதவிக்கு சீனாவை அழைக்க, சீனாவும் தக்க சமயத்தில் நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
பதவியேற்ற போது, அண்டை நாடுகளுடன் ஒற்றுமையான போக்கை கடைபிடிப்பேன் என்று கூறிய மோடி அரசு, இந்தியத் துணைக்கண்ட பகுதியில், ஆதரவாய் இருந்த நேபாளத்தை இழந்து பெரும் தவறு இழைத்துவிட்டதாகவே தோன்றுகிறது.
அதே நேரத்தில், நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவுடனான வேற்றுமைகளை களைய முயற்சிகள் எடுப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.