Home Featured நாடு மொகிதின் யாசின் தலைமை உருவாகுமா? அல்லது அன்வாரின் கதிக்கு ஆளாவாரா?

மொகிதின் யாசின் தலைமை உருவாகுமா? அல்லது அன்வாரின் கதிக்கு ஆளாவாரா?

632
0
SHARE
Ad

MUHYIDDIN_PPAUH (1)கோலாலம்பூர் – துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வந்த அம்னோவின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று மீண்டும் வீறு கொண்டு எழுந்து, துணிந்து, நஜிப்புக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.

பிரதமர் நஜிப்பின் பதவி விலகலுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீருடன் இன்று ஒரே மேடையில் களமிறங்கியிருக்கும் மொகிதின் யாசின் அம்னோ தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுக்கு சரியென்று பட்டால், தலைமைத்துவத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கக்கூடாது என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

அன்வாரின் நிலைமை ஏற்படுமா?

#TamilSchoolmychoice

இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கைருடின் அபு ஹாசான், மற்றும் அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் ஆகியோருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்திருக்கும் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர்களோடு கைகோர்த்திருக்கின்றார் மொகிதின்.

UMNO_logo_baru1இதன் மூலம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் எனக் காரணம் காட்டி இனி அவர் மீது அம்னோ தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க முடியும்.

அவ்வாறு மொகிதின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக தற்போது துணைப் பிரதமராக இருக்கும் சாஹிட் ஹாமிடி அம்னோவின் இடைக்காலத் துணைத் தலைவராக நியமிக்கப்படலாம்.

அப்படி நிகழ்ந்தால், அன்வார் இப்ராகிமிற்குப் பிறகு அம்னோவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுபவராக மொகிதின் திகழ்வார்.

மொகிதினை கட்சியிலிருந்து நஜிப் நீக்காவிட்டால், தற்போது புறப்பட்டிருக்கும் முன்னாள் தலைவர்களின் அணி மக்களிடையே பிரபலமும், பலமும் பெற்று, அதன் மூலம் அவர்களின் ஆதரவும் மொகிதினின் தலைமைத்துவத்திற்கு கிடைத்து, மொகிதின் அம்னோவில் மேலும் வலுவுடன் காலூன்றும் நிலைமை ஏற்படும்.

Najib Tun Razak Prime Ministerஅடுத்த அம்னோ தலைவராக, அடுத்த பிரதமராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள மொகிதின் முடிவு செய்து விட்டார் – துணிந்து விட்டார் – என்பதையே அவரது இன்றைய செய்கை காட்டுகின்றது.

நஜிப்புக்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பு அலைகளைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றில் நீந்திக் கரையேறுவது – அதாவது, நஜிப்பை வீழ்த்தி அம்னோவின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் ஏற்றம் பெறுவது –

இல்லாவிட்டால், நஜிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி, அதன் மூலம் அடுத்த அன்வார் இப்ராகிமாக, அனைத்தையும் இழந்தாலும் பரவாயில்லை என்ற இறுதிக் கட்ட நிலைமைக்கு மொகிதின் வந்துவிட்டதைப் போல் தோன்றுகின்றது.

நஜிப்பும் இறுதிக் கட்டத்தில்…

Ahmad-Zahid-Hamidiஅதே வேளையில் நஜிப்பும் துணிந்து சில முடிவுகளை மொகிதினுக்கு எதிராக எடுக்கக்கூடும்.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்ட நிலையில், இனி சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்ற முடிவுடன் மொகிதினைக் கட்சியில் இருந்து ஒரேயடியாகத் தூக்கி எறிந்து விட்டு, அதன் மூலம் எழும் எதிர்ப்புகளையும் சமாளிக்கும் முடிவுக்கு நஜிப் வரக் கூடும்.

இல்லையேல், பெருகி வரும் நெருக்குதல்களுக்கு அடிபணிந்து பதவி விலக நஜிப் முன்வர வேண்டும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடிகள் – எதிர்ப்புகள் – இவற்றுக்கிடையில் இன்னும் எத்தனை நாளைக்கு நஜிப் தாக்குப் பிடிப்பார் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இன்றைக்கு மொகிதின் நடந்து கொண்ட விதத்தை வைத்து, அவரைக் கட்சியிலிருந்து ஒரேயடியாகத் தூக்கிவிட நஜிப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

hishamuddinமொகிதினை கட்சியிலிருந்து நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக துணைத் தலைவராக நடப்பு துணைப் பிரதமர் சாஹிட்டை நியமித்துவிட்டு, பதவி விலகுவது ஒன்றுதான், தன்னைச் சுற்றியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டு வலைப் பின்னலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நஜிப்புக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றார்கள்.

நஜிப் பதவி விலகும் வேளையில், சாஹிட் பிரதமராகவும், அம்னோவின் இடைக்காலத் தேசியத் தலைவராகவும் பதவியேற்பார்.

இடைக்கால அம்னோ துணைத் தலைவராகவும், துணைப் பிரதமராகவும் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. அதன் பின்னர் மொகிதின் அம்னோவில் மீண்டும் தலையெடுக்க முடியாத அளவுக்கு தலைமைத்துவ மாற்றங்களும், அமைச்சரவை மாற்றங்களும் நிகழ்த்தப்படும்.

தொடர்ந்து, தேசிய முன்னணியின் தலைமையை ஏற்று, 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் மாபெரும் பொறுப்பு சாஹிட், ஹிஷாமுடின் இருவரின் தோள்களில் சுமத்தப்படும்.

அதே வேளையில், பதவி விலகிச் செல்லும் நஜிப் மீது கிரிமினல் குற்றங்கள் ஏதும் சுமத்தப்படாமல், 1எம்டிபி  விவகாரத்திலிருந்து அவரைக் காப்பாற்றும் பொறுப்பை தனக்குப் பதவிகள் வழங்கிய விசுவாசத்திற்காக, சாஹிட்டும் (அண்ணன் முறை என்பதால்) தனது சகோதர பாசத்திற்காக ஹிஷாமுடினும் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

எனவே, இப்போதைக்கு மொகிதினின் இன்றைய துணிவான, நிலைப்பாட்டிற்காக அவர் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது

நஜிப் தரப்பினரால் மாற்று வியூகம் வகுக்கப்படுமா?  என்பதுதான் மலேசிய அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கேள்வி!

-இரா.முத்தரசன்