கோலாலம்பூர்- நேற்று சில நிமிடங்களிலேயே அவசரம் அவசரமாக நடந்து முடிந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அஃபண்டி அலி, 1எம்டிபி நிறுவனம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை என்று கூறிவிட்டு, கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களிடம் இருந்து எந்தவித கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் வெளியேறினார்.
வெளிநாடுகளில் முதலீடுகள் செய்வதற்காக, பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கியபோதே மத்திய வங்கியான பேங்க் நெகாரா கேள்விகள் கேட்டு விளக்கங்கள் பெற்றிருக்க வேண்டும் – அப்போது செய்யாததால் அதனால் 1 எம்டிபி குற்றம் இழைத்ததாக இப்போது கூற முடியாது எனவும் அஃபண்டி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“பேங்க் நெகாரா விளக்கம் கேட்காததற்கு 1எம்டிபி நிறுவனத்தை எவ்வாறு குற்றம் கூற முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள அஃபண்டி, இதன் காரணமாக புதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் 1எம்டிபி மீதான விசாரணையை மறு ஆய்வு செய்து மீண்டும் தொடக்க அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.