கோலாலம்பூர்- பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய பாதுகாப்பு தொடர்பான குற்றங்களைத் தடுக்க சொஸ்மா சட்டம் பயன்படுத்தப்படுவதை தாம் எப்போதுமே ஆதரிப்பதாகவும், அச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மட்டுமே தாம் எதிர்ப்பதாகவும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
சொஸ்மா சட்டம் தொடர்பான தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்ட சில தரப்பினர் குற்றம் சாட்டுவது தவறு என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“எதற்காக சொஸ்மா சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு முரணாக அச்சட்டம் பயன்படுத்தப்படுவதை நான் ஏற்கமாட்டேன். டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான், மத்தியாஸ் சாங் இருவரது கைது நடவடிக்கைகளும் அத்தகைய முரணான வகையில் நடந்துள்ளன” என்று மொகிதின் கூறியுள்ளார்.
பதவியில் இருந்தபோது தாம் சொஸ்மா சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் மிகுந்த உறுதியுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அச்சட்டம் எக்காரணத்தை முன்னிட்டும் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என தமக்கு உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக அரசியல் எதிர்ப்புகளை மவுனமாக்கவும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிராகவும் அச்சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தம்மிடம் கூறப்பட்டதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“1எம்டிபி முறைகேடு குறித்து புகார் செய்வது சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அளவுக்கான சதி வேலையாக கருதப்படக்கூடாது. நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக அவர்கள் இருவரும் (கைருடின், மத்தியாஸ்) தங்களுக்குரிய கடமையை ஆற்றவில்லையா? நாட்டின் வங்கி அமைப்புக்கு எதிராகவும், நிதி அமைப்புக்கு எதிராகவும் சதிவேலையில், கீழறுப்பு வேலையில் ஈடுபட்டது யார்? இந்த விவகாரத்தில் மவுனம் காத்து இத்தகைய தவறான நடவடிக்கைகளை அம்னோ தலைவர்கள் ஊக்கப்படுத்தப் போகிறார்களா?” என்றும் மொகிதின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.