சென்னை- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வைபவம் இறுதிக்கட்டத்தை எட்டிப் பிடித்துள்ளது. அந்தச் சங்கத்தின் சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் இம்முறை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் இத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் அஞ்சல் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களைக் கவரும் கையில், விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், சரத்குமார் அணியும் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு தரப்பிலும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இரு தரப்புமே இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுக்கவும் செய்துள்ளன.
நடிகர் சங்கத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 3,139. வெளியூர்களில் வசிப்பவர்களில் 934 பேர் அஞ்சல் வழி வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்களில் 241 பேர் நேரடியாக வந்து வாக்களிப்பதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்பே அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் 39; மதுரையில் 22 என இதுவரை 61 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பதில் அஞ்சல் வாக்குகள் முக்கியப் பங்கு வகிப்பதால், அஞ்சல் வழி வாக்குப்பதிவை இரு தரப்பிலும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளில் உட்கட்சித் தேர்தல் நடைபெறும்போது வெட்டுக் குத்துக்கள் அரங்கேறும். அவற்றுக்கு இணையாக நடிகர் சங்கத் தேர்தலிலும் இம்முறை பல்வேறு திடுக் திருப்பங்களும், மோதல்களும் அரங்கேறி வருகின்றன.