கோலாலம்பூர்- சீன சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் வென்றெடுப்பது சாத்தியமில்லை எனில், தேசிய முன்னணி இந்திய இளையர்களின் பிளவுபடாத ஆதரவைப் பெற வேண்டியது மிக அவசியமான ஒன்று என கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
மஇகா இளைஞர் பிரிவு மாநாட்டில் பேசிய அவர், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்தான் இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே மிக முதன்மையானது, சவாலானது (father of all elections) என்றார்.
ஏனெனில் அடுத்த தேர்தல்தான் கட்சியின் இருப்பை உறுதி செய்யும் தேர்தல் என்று குறிப்பிட்டார்.
“சீன சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் வென்றெடுப்பதில் நாம் இன்னமும் கூட சில சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனவே இந்திய இளைய சமுதாயத்தினரின் ஒருங்கிணைந்த ஆதரவைப் பெற வேண்டியது நமக்கு அவசியமாகிறது.
“மஇகாவில் நிலவிய உட்கட்சிப் பிரச்சினைகளை பின்தள்ளிவிட்டு, இளைஞரணி தலைவர்கள் மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என கைரி வலியுறுத்தினார்.
‘MIC YOUTH’ என்பதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களின் அர்த்தத்திற்கும் ஏற்ப மிதவாத போக்குடன், பரிவு உணர்வுடன், புத்திக்கூர்மைடன் இளமைத்துடிப்புடன் முறையாக, ஒருங்கிணைந்து, நம்பிக்கையுடன், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“உண்மையான தைரியம் என்பது சொந்த சமுதாயத்தினர் மத்தியில் மட்டும் கதாநாயகனாக இருப்பது அல்ல. மாறாக ஒட்டுமொத்த மலேசியர்களின் நாயகனாக இருத்தல் வேண்டும். இத்தகைய கோட்பாடுகளுடன் செயல்பட்டால், மஇகா இளைஞர் பிரிவால் மக்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும்” என்று கைரி மேலும் தெரிவித்தார்.