கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா இளைஞர், மகளிர் பகுதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக் கொள்வோம் என அறைகூவல் விடுத்தார்.
ம.இ.காவின் போராட்டக் காலத்திலும் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்திலும் கட்சிக்குப் பலமாகவும் பாதுகாப்பாகவும் திகழ்ந்து இரவு பகல் பாராமல் உழைத்து, கட்சியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ம.இ.காவின் மிக முக்கிய 4 பிரிவுகளான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பொறுப்பாளர்களுக்கு தனது வணக்கத்தையும் மரியாதையையும் சுப்ரா தனதுரையில் தெரிவித்துக் கொண்டார்.
“கட்சியைப் பொறுத்தவரையில் சவால்மிக்க காலக்கட்டங்களைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்தையும் கடந்து வந்து விட்டோம் என்று கூறுவேன். இப்பொழுது நம்மைப் பொறுத்தவரையில் இந்த சவால்மிக்க காலங்களைக் கடந்து வருவதற்கு முன்பு பல போராட்டங்கள், எதிர்பாராத திருப்புமுனைகள் அனைத்தையும் கடந்து வந்து விட்டோம். தற்பொழுது எதிர்காலத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்ட சுப்ரா,
“இவற்றுள் முக்கியமானவை என்னவென்றால் இந்திய சமுதாயத்தினரிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டில் ஏறக்குறைய இருபது இலட்சம் இந்தியர்கள் இருக்கின்றோம். அந்த இருபது இலட்சம் பேரும் இருபது திசைகளாகப் பிரிந்து, இருபது குரல்களாக ஒலிக்கக்கூடாது. அனைவரும் இணைந்து ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும். சமுதாயத்தின் ஒன்றுமையே ம.இ.காவின் வலிமையாகும். நம் சமுதாயம் பிளவுபட்டால் அரசியல் ரீதியாக நாம் பலவீனம் அடைந்து விடுவோம்” என்று இளைஞர், மகளிர் பகுதிகளுக்கு நினைவுபடுத்தினார்.
பிரிந்து கிடக்கும் கட்சியினரை ஒன்றிணைப்போம்
“ம.இ.கா கட்சியைப் பொறுத்தவரையில் நமது முதல் கடமை என்னவென்றால் பிரிந்து கிடக்கக்கூடிய நமது சமுதாயத்தை ஒன்றிணைத்து ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயமாக உருவாக்கி ஒரே குரலாக ஒலிக்கக்கூடிய சமுதாயமாக உருவாக்குவதுதான். ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயத்தின் சாதனைகள் எல்லையற்றது.. சமுதாய ஒற்றுமை நமக்கு எல்லையற்ற சாதனையக் கொண்டு வரும்” என்றும் சுப்ரா பேராளர்களுக்கு அறிவுறுத்தினார்.
“கடந்த 5 ஆண்டுக்காலமாக அடைய வேண்டிய பலவற்றை அடையாமல் போய் விட்டோம். ஆனால், அதனைப் பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். பொற்காலத்தை இழந்து விட்டோம். நடந்ததைப் பற்றி இனியும் பேச முடியாது. நடக்கப் போவதைப் பற்றிதான் இனி பேச வேண்டும். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நமது வேலைகளை நாம் சரியாகச் செய்யவில்லையென்றால் நாம் சரித்திரமாக மாறிவிடுவோம். நிகழ்கால சரித்திரமாக அல்ல மாறாக கடந்தக் கால சரித்திரமாக மாறிவிடுவோம். நிகழ்கால சரித்திரமாகத் திகழ வேண்டுமென்றால் நாம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றது. அதனைச் சரியாகச் செய்யக்கூடிய சூழ்நிலையில்தான் இப்பொழுது நாம் இருக்கின்றோம்” என்றும் சுப்ரா தெரிவித்தார்.
“வெளியே இருக்கக் கூடியவர்களையும், வெளியே இருக்கக்கூடிய மற்ற கட்சி உறுப்பினர்களையும் ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டிய வாய்ப்பும் இருக்கின்றது. சம்மந்தப்பட்டவர்கள் மனம் திறந்து நம்மோடு சேவையாற்ற வந்தால் அதற்கான சாத்தியங்கள் உள்ளது. நம்மிடையே பிரிவினைகள் வேண்டாம். ஏனென்றால், நம்முடைய உணர்வு, நோக்கம், சென்று கொண்டிருக்கக்கூடிய திசைகள் என அனைத்தும் ஒன்றுதான். எனவே, பெருந்தன்மையோடு ஒன்றாக இணையக்கூடிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் இறங்க வேண்டும்” என வலியுறுத்திய டாக்டர் சுப்ரா,
“என்னைப் பொறுத்தவரையில், நான் எல்லோருக்கும் தலைவராக இருக்கத்தான் விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குத் தலைவராக இருக்க விரும்பவில்லை. அதுவே சிறந்த தலைமைத்துவத்திற்குரிய மதிப்பாகும். நான் வட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட விரும்புகின்றேன்” என்றும் கூறினார்.
குடும்ப அரசியலில் இருந்து மஇகாவை விடுவிப்போம்
“இனி ம.இ.காவில் குழு என்றே பேச்சுக்கே இடம் கிடையாது. இனி ம.இ.கா வரலாற்றில் ஒரே குழு மட்டும்தான். அது ம.இ.கா குழு மட்டும்தான். ம.இ.காவில் பல்வேறு குழுக்கள் என்பதை நான் வன்மையாகக் கண்டிப்பது மட்டுமின்றி நிச்சயமாக எதிர்க்கிறேன். ஒருங்கிணைக்கப்ட்ட சத்தியாக நாம் செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்கு முத்தாய்ப்பாகத் தொகுதித் தலைவர்கள் சிந்தனையில் பல புரட்சி மாற்றங்கள் தேவை” என்றும் சுப்ரா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
“அடுத்ததாக, குடும்ப அரசியலிலிருந்து ம.இ.கா விடுதலை செய்யப்பட வேண்டும். குடும்ப அரசியல் ம.இ.காவை பலவீனப்படுத்தி வேண்டும். அனைவரையும் அணைத்துக் கொள்ளும் ஒற்றுமை கட்சியில் நிலவ வேண்டும். இவற்றில் ம.இ.கா தலைவர்களிடையே ஒரு சிந்தனை உருமாற்றம் தேவையாகின்றது. சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளைஞர்களை வளர்த்து விடுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அது ஆண்களாகவும் இருக்கலாம் பெண்களாகவும் இருக்கலாம். ஒரு காலக்கட்டத்திலும் பெண்கள் கூட கட்சியின் தேசியத் தலைவராக உருமாற்றம் அடையலாம்”
“இவையனைத்தையும் அமல்படுத்துவதற்கு ம.இ.காவை முதலில் ஜனநாயகப் படுத்தப்பட வேண்டிய காலக்கட்டம் இது. ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்திய சமுதாயத்திற்கு வரக்கூடிய எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்கு வழிக்காட்ட ம.இ.கா ஒரு போதும் தயங்காது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நம் சமுதாயம் பிரச்சனைகளையும் இன்னல்களையும் எதிர்நோக்கும் போது சமுதாயத்திற்குத் துணையாக இருப்போமே தவிர ஒதுங்கி நின்று இருக்கும் பார்வையாளராக நிச்சயமாக இருக்க மாட்டோம் என்பதில் நாம் உறுதி கொள்ள வேண்டும்”
“நம் சமுதாயத்தில் படித்தவர்களும் படித்துக் கொண்டிருப்பவர்களும் அதிகம் இருக்கின்றனர். அவர்களை ம.இ.காவில் ஒருங்கிணைப்பதே புத்ரா புத்ரி பிரிவினரின் தலையாய கடமையகும். அதுதான் ம.இ.காவின் வருங்காலமாகும். அவர்களே ம.இ.காவின் எதிர்கால விழுதுகளாவர். இளைஞர்களின் வயதானது சுலபமாக ஆட்கொள்ளக்கூடியவையாகும். எனவே, அவர்களைச் சரியாக ஆட்கொள்ள வேண்டிய முதலீட்டினை புத்ரா புத்ரி பிரிவினர் கொண்டு வர வேண்டும். அவர்களிடம் நேரடி தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.”
“தங்களின் கடமைகளைக் குறிப்பிட்ட 4 பிரிவினர்களும் சரியாகச் செய்தார்களென்றால் ம.இ.காவில் வரையறுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் சரியாகச் செயல்படுத்த முடியும். ஏறக்குறைய 70% செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு விடும். மீதம் 30% மட்டுமே நாம் உழைக்க வேண்டும். எனவே, அடுத்த வரக்கூடிய பொதுத்தேர்தலின் காலக்கட்டத்திற்குள் அரசியல் ரீதியாகவும் மற்ற மற்ற ரீதியாகவும் ம.இ.காவை வலிமைப் படுத்துவதற்கு இன்றிலிருந்து பாடுபட வேண்டும்”
டாக்டர் சுப்ரா மேற்கண்டவாறு தனது அதிகாரபூர்வத் தொடக்க உரையில் தெரிவித்தார்.