கோலாலம்பூர் – நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்து நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது.
இந்தத் தேர்தல் நடந்து முடிவதற்குள் தான் எத்தனை பரபரப்புகள், களேபரங்கள் தமிழ்நாட்டில்?. ஒரு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதைப் போல் அத்தனை போலீஸ் பாதுகாப்புகளுடன் நடந்து முடிந்த இந்த நடிகர் சங்கத் தேர்தலில், ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு நேரலை ஒளிபரப்புகள், வாக்கு மையத்தில் நடிகர், நடிகைகளின் நேரடிப் பேட்டிகள் என மேலும் பரபரப்பைக் கூட்டிவிட்டன.
நேற்று நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த பிரபுவும் அவரது மகன் விக்ரம் பிரபுவும்…
நல்லவேளையாக, இதில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் எதுவும் இருந்ததாய் தெரியவில்லை. காரணம், வழக்கமாகக் கட்சித் தேர்தல்களில் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக நடிகர்களும், நடிகைகளும் களமிறக்கப்படுவார்கள். தேர்தல் சமயங்களில் பிரபல நடிகர், நடிகைகள் ஜீப்பில் நின்று கொண்டு வீதி வீதியாக வலம் வந்து தாங்கள் சார்திருக்கும் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு வாக்குகள் சேகரிப்பது தமிழ்நாட்டில் காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. நடிகர் வடிவேலு கூட வாயை விட்டு வசமாகச் சிக்கிக் கொண்டது அப்படி ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் தான்.
அந்த வகையில், நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் யாரும் களமிறங்கி விடுவார்களோ? என்ற சந்தேகம் கூட இருந்து வந்தது. அப்படிப்பட்ட விபரீதங்கள் ஒன்றும் நடக்கவில்லை.
வாக்களிக்க வரும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார்…
இந்நிலையில், இந்த நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில், சரத் அணியும், விஷால் அணியும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி பேசிக் கொண்டது, தேர்தலுக்கு முதல்நாள் சரத்குமார் பேசிய பேச்சு, உண்மையில் அது நடிகர் சங்கத் தேர்தல் தானா? என்று யோசிக்க வைத்தது. என்னோடு நேருக்கு நேர் போட்டி போட முடியுமா? கமல் என்ன பெரிய நடிகரா? நல்ல இயக்குநர் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என சென்சார் செய்யாமல் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். நடிகர் ராதாரவி கேட்கவே வேண்டாம்.
அதே போல் நேற்று தேர்தல் நாள் அன்று விஷால் தாக்கப்பட்டது, “எவ்வளவு தடுத்தாலும், என்னை அடித்தாலும் தேர்தல் நிக்காது” என்று விஷால் கண்ணீர் மல்க சூளுரைத்தது போன்றவை பொதுமக்களைப் பொறுத்தவரையில் ஒரு சினிமா பார்ப்பதைப் போன்ற உணர்வு தான் மேலோங்கியிருக்கும்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் நாசர் – விஷால் அணியினர்…
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது பழமொழி. ஆனால் கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு பெருங்கொண்டாட்டம் என்ற புதுமொழியை இந்த நடிகர் சங்கத் தேர்தல் உணர்த்தியுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணி ஜெயித்தாலும், யார் பதவியில் இருந்தாலும் பொது மக்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்கப் போவதில்லையே?
இனி நாசர் தலைமையிலான அணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும். நல்ல திரைப்படங்களை உருவாக்கட்டும். ஆனால் அதற்கு முன்பு தமிழ் சினிமா, ஒன்றை ஏற்கத் தயாராகிக் கொள்ள வேண்டும்.
வாக்களிப்பு மையத்தில் கமலஹாசன்-கௌதமி-கோவை சரளா…
அது என்னவென்றால், அரசாங்கம், காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் நடக்கும் பதவிப் போராட்டங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் கேலியும், கிண்டலுமாக திரைப்படமாக எடுத்த தமிழ் சினிமா, நடிகர் சங்கத்தில் கூட பதவிகளுக்கு அப்படிப்பட்ட போட்டிகள் இருப்பதையும், அதற்காக ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து நீதிமன்றம் வரை செல்வார்கள் என்பதையும் ஊடகங்களின் வாயிலாக வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.
கதைத் தட்டுப்பாடு உள்ள இன்றைய காலகட்டத்தில், ஒரு சுவாரஸ்யமான முழு நீள நகைச்சுவைக் கதை உருவாக்கும் அளவிற்கு நேற்று வரை அவ்வளவு நிகழ்வுகள் நடந்துள்ளன.
எனவே விரைவில், இந்தக் கதையையே வைத்து, “நடிகர் சங்கத் தேர்தல்” என்ற புதிய திரைப்படம் உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
அந்தத் திரைப்படத்தை இயக்கப் போவது யார்? யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள்? எந்த மொழியில் தயாராகப் போகிறது என்பது இப்போதைக்குத் தெரியாது. ஆனால் விரைவில் அப்படி ஒரு கதையுடன் கூடிய படம் வரும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
பார்வை – செல்லியல்