கோலாலம்பூர் – எதிர்வரும் மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக இன்று டத்தோ வி.எஸ்.மோகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எதிர்வரும் மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன் என்பதை பணிவுடன் அறிவிக்க விரும்புகிறேன். கடந்த 69 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து முன்னிலையில் இருந்து வரும் அரசியல் கட்சியாக மஇகா செயல்பட்டு வருகின்றது. கட்சியின் எதிர்கால இயக்கத்தை கருத்தில் கொள்ளவும், முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரவும், கட்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் இந்தத் தேர்தல் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.”
“இதை மனதில் கொண்டு, தார்மீக அடிப்படையிலான இந்த வாய்ப்பை ஏற்று உதவித்தலைவருக்குப் போட்டியிடுகின்றேன். நமது கட்சிக்காக தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தனது சீர்திருத்தப் நிரலில் கொண்டு வந்துள்ள முறைகள் அதை செயல்படுத்த உதவுகின்றன.”
“நெகிரி செம்பிலான் மஇகா பொதுச்செயலாளராக கடந்த 2000 முதல் 2009-ம் ஆண்டு வரை செயல்பட்ட அனுபவம் எனக்கு உண்டு. பின்னர் ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த 2009 மற்றும் 2013-ம் ஆண்டு கட்சித் தேர்தல்களில், மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், பின்னர் மஇகா தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். அந்தப் பதவியில் தற்போது வரை செயல்பட்டு வருகின்றேன்.”
“மாநில செயற்குழுவில் பணியாற்றிய போது, பொதுமக்களின் பிரச்சனைகளான பள்ளி நில விவகாரங்கள், இந்தியர்களின் குடியிருப்புப் பிரச்சனைகள், மலிவு விலை வீடுகள், பொதுமக்கள் நல்வாழ்விற்கான தேவைகள், இந்திய இளைஞர் எழுச்சி, அரசு சாரா இயக்கங்களுக்கு ஒதுக்கீடு பெற்றுத்தருவது, நெறிப்படுத்தப்பட்ட தமிழ்ப் பள்ளி ஆளுநர்கள் வாரியம் ஆகியவற்றின் தொடர்புடைய விவகாரங்களில் பல தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் தேசிய அளவில் மஇகா தலைவர்களுடன் நட்புறவுடன் உள்ளேன்”
“தேசிய அளவில் சேவையாற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். மரியாதைக்குரிய நமது கட்சியில் தேசிய உதவித்தலைவராக நான் சேவையாற்றும் வாய்ப்பை மஇகா பேராளர்கள் அளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று டத்தோ விஎஸ்.மோகன் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.