கோலாலம்பூர் – சுவாரசியமான சில முடிச்சுகளுடன் கூடிய திரைக்கதைதான் என்றாலும், அதனை இறுதிவரை காமெடி கலந்த நகைச்சுவைப் படமாகக் கொண்டு செல்வதா அல்லது ரௌடிகளின் ராஜ்ஜியத்தை சீரியசாகக் காட்டுவதா என்ற குழப்பத்திலேயே இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருப்பதால், நமது மனங்களிலும் “நானும் ரௌடிதான்” படம் ஒட்டாமலே முடிகின்றது.
படத்தோடு நம்மை ஒட்ட வைப்பது நயன்தாராவின் கச்சிதமான, பாத்திரத்தோடு பொருந்திப் போகும் நடிப்பும், விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற நட்சத்திர நடிகர்களின் அணிவகுப்பும்தான்.
கதை – திரைக்கதை
போலீஸ்கார அப்பா (அழகம் பெருமாள்) ஒரு ரௌடியோடு (பார்த்திபன்) மோதிவிட அதற்காக பழிவாங்க ரௌடி வீட்டுக்கு வெடிகுண்டு அனுப்ப – அந்த வெடிப்பில் மனைவியைப் பறிகொடுக்கின்றார் அந்தப் போலீஸ்காரர். அந்த விபத்தில் அவரது மகள் கேட்கும் திறனை இழக்கின்றாள்.
பின்னர் மகளாக வரும் நயன்தாரா பெரியவளான பின்னரும் வஞ்சம் கொண்டு போலீஸ்கார அப்பா, ரௌடியைப் பழிவாங்கச் செல்ல, அப்போது ரௌடியால் கொல்லப்படுகின்றார் அவர்.
இதற்கிடையில் காணாமல் போன அப்பாவைத் தேடிச் செல்லும் நயன்தாரா, அந்த இரவில் விஜய் சேதுபதியைச் சந்திக்கின்றார். விஜய் சேதுபதியின் அம்மா ராதிகா சரத்குமாரும் போலீஸ் அதிகாரி. மகன் விஜய் சேதுபதி தன்னைப் போலவே போலீசில் வேலைக்குச் சேர வேண்டும் என்று பாடுபடுகின்றார்.
நயன்தாராவைக் காதலிக்கத் தொடங்கும் விஜய் சேதுபதி அவரது பிரச்சனையைத் தெரிந்து கொண்டு, தன் தந்தையைக் கொன்ற ரௌடியைக் கொல்ல வேண்டும் என்ற நயன்தாராவின் குறிக்கோளைச் செயல்படுத்த அவருடன் இணைகின்றார்.
அடுத்து ரௌடி பார்த்திபனைத் தேடிப் பிடித்து கொன்றார்களா, என்ன நடந்தது என்பதுதான் பின்பாதிக் கதை.
முதல் பாதி வரை கொஞ்சம் சுவாரசியங்களோடும், சில திருப்பங்களோடும் நடைபோடும், திரைக்கதை பின்பாதியில் நொண்டியடிக்கின்றது.
இடைவேளை வரும்போது, ரௌடியைக் கொல்ல வேண்டும் என்ற நயன்தாராவின் குறிக்கோளை நிறைவேற்றுவதாகக் கூறிவிட்டு, பின்னர் ஒவ்வொரு காட்சியிலும், சொதப்புகின்றார் சேதுபதி.
ஒரு பக்கம் ரௌடிகளை பக்கா கொலைகாரர்களாக, எதற்கும் அஞ்சாத படுபாதகர்களாக காட்டிவிட்டு, இன்னொரு பக்கம், ரௌடி பார்த்திபனைக் கொல்ல புறப்படும் விஜய் சேதுபதியின் குழு சீரியசாக எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் விளையாட்டாகச் செய்வதுபோல் காட்டியிருப்பது இயக்குநரின் திரைக்கதையில் இருக்கும் மிகப் பெரிய நெருடல்.
அதனால், இதைக் காமெடிப் படமாகக் காட்டுவதா அல்லது சீரியசான குண்டர் கும்பல் நடவடிக்கைகளைக் காட்டும் படமாகக் காட்டுவதா என்ற குழப்பம் இயக்குநருக்கு இருப்பது நன்கு தெரிகின்றது. படம் பார்க்கும் நமக்கும் அந்தக் குழப்பம் தொற்றிக் கொள்கின்றது.
படத்தின் பலம் நட்சத்திர நடிகர்களின் நடிப்பு
படத்தின் முக்கிய பலமான, நயன்தாராவுக்கு வெறும் கதாநாயகியாக வந்து போகும் பாத்திரமல்ல. கவர்ச்சி காட்டவும் துளியும் வாய்ப்பில்லை.
காது கேட்காது, ஆனால் வாய்பேச முடியும் – அதுவும் எதிரே நிற்பவரின் வாயசைவை வைத்து அதற்கேற்ப புரிந்து கொள்ள முடியும் என்ற தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கின்றார் நயன்தாரா.
அதிலும் இந்தப் படத்தில்தான் முதன் முறையாக சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கிறாராம் நயன்தாரா. தொழில் பக்திகொண்ட நயன்தாரா, டப்பிங் பேசும்போது தனது முதல் முயற்சி என்பதால், ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் டப்பிங் ஸ்டூடியோவில் நடித்துப் பார்த்துப் பின்னர் குரலைப் பதிவு செய்தார் என இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கின்றார்.
சர்ச்சையைக் கிளப்பிய ‘அந்த’ தம்படத்தில் – நானும் ரௌடிதான் இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நயன்தாராவின் அந்த நுணுக்கமான கதாபாத்திரத்தை சிறப்பாகவே காட்சிகளின் மூலம் கையாண்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த இயக்குநர்தான் அண்மையில் நயன்தாராவுடன் நெருக்கமாக நின்று தம்படம் (செல்ஃபி) எடுத்து – தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் காதுகளிலிருந்து புகைமூட்டம் வெளிவரச் செய்தவர்.
ரௌடியாக வரும் பார்த்திபனுக்கு அவரது நிறமும், ஆஜானுபாகுவான உருவமும் கைகொடுக்கின்றது. வில்லத்தனத்திலும், தனது வழக்கமான நக்கல், நையாண்டிகளோடு முத்திரை பதிக்கின்றார்.
விஜய் சேதுபதி மீசையில்லாமல் வித்தியாசமான தோற்றத்துடன் வந்து வழக்கமான தனது நடிப்பை வழங்கியிருக்கின்றார். அவருக்குத் தோழனாக வரும் ஆர்.ஜே.பாலாஜி, தனது நகைச்சுவை நடிப்பால் கலக்கியிருக்கின்றார். அவரது நகைச்சுவை வசனங்கள்தான் படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்ல உதவி புரிந்திருக்கின்றன.
படம் நெடுக சிரிப்பை வரவழைக்கும் காட்சிகளை அடுக்கி வைத்திருப்பது படத்தை ரசிக்க உதவியிருக்கின்றது என்றாலும், பின்பாதியில் கதாபாத்திரங்கள் வழவழவென்று பேசிக் கொண்டே இருப்பது படத்தின் விறுவிறுப்பை வெகுவாக குறைத்துவிட்டது.
அதிலும், சாலையில் மடக்கிப், பார்த்திபனைக் கொல்ல வேண்டிய காட்சியில் விறுவிறுப்பும், பரபரப்பும் காட்ட வாய்ப்புகள் இருந்தும், கதாபாத்திரங்களை தொணதொணவென்று பேசவைத்து அந்தக் காட்சிகளை இயக்குநர் சொதப்பியிருக்கின்றார்.
அனிருத்தின் இசை தனித்துவமாக மிளரவில்லை என்றாலும் பரவாயில்லை ரகம்.
மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு படத்தில் நகைச்சுவை சேர்த்துள்ளனர்.
பலவீனங்கள்
படத்தின் பின்பாதியில் மேலும் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திரைக்கதையை விறுவிறுப்பாக்கி, வளவள வசனங்களைக் கொஞ்சம் குறைத்திருந்தால், படம் சிறப்பாக வந்திருக்கும்.
அதே போல, படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் சேதுபதியின் அம்மாவாக வரும் ராதிகாவைத் தூக்கி விட்டார்கள் என்று கூறுவதும் பின்னர் ஒன்றுமே நடக்காதது போல் அவர் திரும்பி வருவதும் தேவையில்லாத செருகல்.
நயன்தாராவின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படம் மறக்க முடியாத படமாக வந்திருக்கும்.
-இரா.முத்தரசன்