கோலாலம்பூர்- மலேசிய ரசிகர்களின் அன்பும் உபசரிப்பும் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்வாசநேகரை மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அனைத்துலக உருமாற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கலிபோர்னிய மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான ஆர்னால்ட் கோலாலம்பூர் வந்திருந்தார்.
அனைத்துலக உருமாற்ற கருத்தரங்கில் இன்று உரையாற்றிய ஆர்னால்ட்
மொத்தம் 48 மணி நேரம் மட்டுமே அவர் இங்கு தங்கியிருந்தாலும், மலேசியாவைப் பற்றிய நல்லெண்ணம் அவர் மனதில் பதிந்துள்ளது. இதை தனது வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்தினார்.
“கோலாலம்பூரையும், மலேசியாவையும் அதிகம் சுற்றிப் பார்த்ததில்லை. ஆனால் இங்கு அன்பான மக்கள் உள்ளனர் என்பதை பார்த்தேன்” என்று கருத்தரங்கில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
வருங்காலத்தில் தனது பிள்ளைகளுடன் மலேசியா வருவதை எதிர்நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அற்புதமான மக்களாக இருப்பதற்காக மலேசியர்களைத் தாம் பாராட்டுவதாகக் கூறினார்.
“நான் தங்கியிருந்த தங்குவிடுதி, உடற் பயிற்சி மேற்கொண்ட உடற் பயிற்சிக் கூடம் தொடங்கி, நான் சென்ற உணவகங்கள் மற்றும் கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் வரை ஒவ்வொரு இடத்திலும் நான் சந்தித்த ஒவ்வொருவருமே அன்பாகவும், அரவணைப்பாகவும் நடந்து கொண்டனர். இந்தளவு அற்புதமான மக்களுக்கு எனது வாழ்த்துகள். நான் மீண்டும் வருவேன்” என அரங்கில் கூடியிருந்தவர்களின் பலத்த கரவொலிக்கு இடையே கூறினார் ஆர்னால்ட்.
“நான் மீண்டும் வருவேன்” ( என்பது தனது திரைப்படங்களில் ஆர்னால்ட் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.