சென்னை – பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று சந்தித்து பேசியுள்ளார். அதேபோல், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியும் ஸ்ரீனிவாசனை இன்று சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்து நடந்துள்ள இவர்களின் சந்திப்புகள் மூலம், ஐபிஎல் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கும் சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணி மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்போது இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். சுப்பிரமணியன் சுவாமி இந்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஸ்ரீனிவாசனுடன், தோனி மற்றும் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் எழுச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.