கோலாலம்பூர் – ஐஓஎஸ் கருவிகளில் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் போது, பேட்டரி (மின்கலன்) வழக்கத்தை விட வேகமாக தீர்ந்து போவதாக பயனர்கள் பலர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ஆராய்ந்த பேஸ்புக் நிறுவனம், அதற்கான காரணத்தையும் தீர்வையும் கண்டறிந்துள்ளது.
ஐஓஎஸ் கருவிகளில் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் போது, ‘சிபியூ ஸ்பின்’ (CPU Spin) என்ற செயல்முறை தொடர்ச்சியாக ஏற்படுமாம். இது மின்கலனை அதிக அளவு பயன்படுத்துமாம்.
அதேபோல், காணொளியை பேஸ்புக்கில் பார்த்துவிட்டு அடுத்த பக்கத்திற்குச் சென்றாலும், அந்த செயலி, காணொளியின் ஒலியை பல சமயங்களில் சரிவர கட்டுப்படுத்தாமல் இருந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள தகவலில், புதிய மேம்பாடுகளில் பேட்டரி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.