புத்ராஜெயா- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தம் மீது வழக்கு தொடுக்க தாம் பொறுமையுடன் காத்திருப்பதாக துன் டாக்டர் லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார்.
“நான் மிகுந்த பொறுமைசாலி. எனவே பிரதமர் குறித்து விமர்சித்ததற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட காத்துள்ளேன். எனவே அவசரம் வேண்டாம்,” என புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் லிங் லியோங் கூறினார்.
தம் மீது வழக்கு தொடுக்க பிரதமர் இவ்வளவு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வது தமக்கு ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் தாம் பொறுமையுடன் காத்திருக்கப் போவதாகத் தெரிவித்தார்.
பிரதமரின் சட்டக் குழுவிடம் இருந்து தமக்கு விளக்கம் கோரும் கடிதம் ஒன்று வந்திருப்பதாகக் குறிப்பிட்ட முன்னாள் மசீச தலைவரான அவர், அதில் தம் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றார்.
“பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்த கருத்தை நான் திரும்பப் பெறப் போவதில்லை. நீதிமன்றத்தில் என்னைத் தற்காத்துக் கொள்ளத் தயார். வழக்கு விசாரணையின் போது பிரதமர் சாட்சிக் கூண்டில் நிற்பதைக் காணக் காத்திருக்கிறேன்” என்றார் லிங் லியோங்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்ததற்காக லிங் லியோங் சிங் மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர் நஜிப் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.