சென்னை- ‘பாகுபலி’ காய்ச்சல் இன்றும் சினிமா ரசிகர்களிடம் இருந்து நீங்கியபாடில்லை. இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து அஜித்தும் சரித்திரப் பின்னணி கொண்ட கதையில் நடிக்கத் தயாராகிவிட்டார்.
இனி எந்த பிரமாண்ட படம் வெளிவந்தாலும் அது ‘பாகுபலி’யுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்பது உண்மை. ‘பாகுபலி’யின் பிரம்மாண்டம் காரணமாக ‘புலி’ படத்துக்கு வசூலில் சரிவு ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த, இயக்குநர் விஷ்ணுவர்த்தனும் சரித்திர கதை கொண்ட படத்தை இயக்கத் தயாராகிவிட்டதாகக் கேள்வி. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு கதையை சினிமாவுக்கு ஏற்றாற் போல மாற்றும் வேலையில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.
டிகேஎஸ் சகோதரர்களால் நடிக்கப்பட்டு புகழ்பெற்ற ராஜராஜ சோழன் நாடகம் பின்னர் உமாபதி தயாரிப்பில், ஏபி.நாகராஜன் இயக்கத்தில் திரைப்படமாக – சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது. சிவாஜி-எம்.என்.நம்பியார் தோன்றும் அந்தப் படக் காட்சி
தஞ்சை பெரிய கோவிலையும், ராஜராஜ சோழன் வரலாற்றையும் பின்னணியாக கொண்ட இந்தக் கதையை அதீத ஆர்வத்தோடு அணுகி வரும் விஷ்ணுவர்த்தனுக்கு தன்னால் ஆன அத்தனை உதவிகளையும் செய்து வருகிறாராம் எழுத்தாளர் பாலகுமாரன்.
இந்தப் படத்தின் நாயகனாக அஜித்தைத் தான் தன் மனதில் பதிய வைத்திருக்கிறாராம் விஷ்ணுவர்த்தன். இது குறித்து அவர் அஜித்திடம் பேசிவிட்டதாகவும் தகவல்.
தனது தொழில் போட்டியாளரான விஜய், ‘புலி’ என்ற சரித்திரப் படத்தை கொடுத்த உடனேயே, இப்படியொரு முயற்சியில் அஜித் இறங்கியிருப்பது ஆரோக்கியமான, அழகான, வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகவே கருதப்படுகிறது.
எழுத்தாளர் பாலகுமாரன் ‘உடையார்’ என்ற பெயரில் சில பாகங்களாக ஒரு நாவலை சோழ சாம்ராஜ்யத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ‘கங்கை கொண்ட சோழன்’ மற்றொரு நாவலையும் படைத்துள்ளார். இதில் எந்த நாவலின் கதை அல்லது அம்சங்கள் சினிமாவுக்கு ஏற்றபடி உருமாற்றம் காணப் போகின்றது என்பதைக் காண, இரசிகர் வட்டாரங்களும், இலக்கிய வட்டங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன.